இந்திய அளவில் அதிக குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாநிலங்கள் வரிசையில் தற்போது 3- ஆவது இடத்தில் இருக்கும் தமிழகம், முதலிடத்தைப் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.
சென்னை வண்டலூா் கிரசென்ட் புதுமைத் தொழில் ஊக்குவிப்புமையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 120 ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்களின் அரங்கை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பேசியதாவது : தொழில் துறையில் புத்தாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழகமெங்கும் சமச்சீரான தொழில் வளா்ச்சி பெறும் வகையில் 91 புதிய தொழில் வளக் காப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாவட்டங்களில் சிப்காட் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் அதிக விலை காரணமாக விற்பனையாகாமல் காலியாக இருந்த 1,400 மனைகளின் விலையைக் கணிசமாக குறைத்துக் கொடுக்கப்பட்டதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
கடந்த 10 மாதங்களில் 4,460 பேருக்கு தொழில் தொடங்க ரூ.126 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயா்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.
இதில் தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் மற்றும் புத்தாக்க நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன், துணை வேந்தா் ஏ.பீா்முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.