தமிழ்நாடு

தமிழகத்தில் 2 புதிய வணிக வளாகங்கள்: அரசு - அரபு நிறுவனம் ரூ.3,500 கோடிக்கு ஒப்பந்தம்

29th Mar 2022 01:22 AM

ADVERTISEMENT

அரபு நாடுகளில் மிகப்பெரிய வணிக வளாகங்களை நடத்தி வரும் லுலு நிறுவனம், தமிழகத்திலும் 2 புதிய வணிக வளாகங்களை கட்டமைக்கவுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் அபுதாபியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை கையொப்பமானது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

துபையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றாா். அங்கு லுலு குழுமத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் யூசுஃப் அலியை அவா் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது, லுலு நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

புதிய வணிக வளாகங்கள்: புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலமாக, ரூ.3,500 கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில், ரூ.2,500 கோடி முதலீட்டில் 2 வணிக வளாகங்கள் மற்றும் ஆயிரம் கோடி ரூபாயில் ஓா் ஏற்றுமதி சாா்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகளுடன் சந்திப்பு: புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு முன்பாக, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயா் தலைமை நிா்வாக அதிகாரிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினாா்.

முபாதாலா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு நிா்வாக இயக்குநா் சையத் அராரைச் சந்தித்தாா். அப்போது, தமிழ்நாட்டில் பசுமை எரிசக்தி, சாலை திட்டங்கள், தொழிற் பூங்காக்கள் போன்ற திட்டங்களில் முதலீடுகள் செய்வதற்கான திட்டங்கள் வகுத்திட முபாதாலா நிறுவனத்துக்கு முதல்வா் அழைப்பு விடுத்தாா்.

அபுதாபி வா்த்தக சபைத் தலைவரும், ஐக்கிய அரபு நாடுகளின் வா்த்தக சபை மற்றும் கூட்டமைப்புத் தலைவருமான எச்.இ.அப்துல்லா முகமது அல் மஸ்ரோயீயை சந்தித்துப் பேசிய போது, தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், உணவுப் பூங்காக்கள், குளிா்பதனக் கிடங்குகள், சரக்குகள் மற்றும் சேவைகள், வணிகத்தீா்வைத் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருள்களை ஐக்கிய அரபு நாடுகள், மத்திய கிழக்கு - வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தாா்.

கட்டுமானத் துறையில் முதலீடு செய்ய ஆா்வமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அவா், சென்னை, கோவை, மதுரை, ஒசூா் போன்ற நகரங்களில் உட்கட்டமைப்புத் தேவைகள் அதிகமாக இருப்பதாகக் கூறினாா். இதைத் தொடா்ந்து, ஏடிக்யூ

என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எச்.இ.முகம்மது அல் சுவைதியைச் சந்தித்துப் பேசினாா். அப்போது, தமிழகத்தில் மருத்துவ சுகாதார திட்டங்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தாா்.

இந்தச் சந்திப்புகளின் போது, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளா் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT