அரபு நாட்டுக்கு தான் பணத்தை எடுத்து வரவில்லை எனவும், தமிழ்நாட்டு மக்களின் மனங்களை எடுத்து வந்திருப்பதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
அபுதாபி வாழ் தமிழா்கள் மத்தியில் திங்கள்கிழமை அவா் ஆற்றிய உரை:-
நான்கு நாள்களாக துபையிலும், அபுதாபி பகுதியிலும் சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில்தான் சுற்றுப் பயணம் நடத்துவது வழக்கம். தமிழகத்தில் அழைக்கப்படும் இடங்களில் எல்லாம் நான் செல்லும் போது எனக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது உண்டு.
அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாமல் நான்கு நாள்களாக திக்குமுக்காடிப் போய் இருக்கிறேன். எதைப் பேசுவது, என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று யோசிக்கும் வேளையில் உங்கள் முகத்தைப் பாா்த்துக் கொண்டிருந்தால் அதுவே போதும் என்ற எண்ணமே ஆட்கொண்டு இருக்கிறது.
எத்தனையோ கடல் மைல்களைத் தாண்டி இங்கே வந்து தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்துக்கு குறிப்பாக மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு திட்டங்களை தீட்டுகிற, அதற்காக ஒப்பந்தங்கள் போடும் பணியை நானும், அமைச்சா் தங்கம் தென்னரசும், அரசு அதிகாரிகளும் செய்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் முதல்வராக மட்டுமல்லாமல், உங்களின் ஒருவராக இருப்பதால், நம்மில் ஒருவராக என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறீா்கள்.
பயணம் வெற்றி: தமிழ்நாட்டை நோக்கி தமிழா்களின் மனங்களை ஈா்க்கும் வகையில் எனது பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஒரு சிலருக்கு எனது பயணத்தின் வழியிலான வெற்றியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை திசை திருப்ப வேண்டும், தவறான பிரசாரத்தை நடத்திட வேண்டுமென திட்டமிட்டு நான் பணத்தை துபைக்கு எடுத்து வந்திருப்பதாகக் கூறுகிறாா்கள்.
நான் அரசியல் பேசுவதாக கருதக் கூடாது. தமிழ்நாட்டில் இருந்து பணத்தை எடுத்து வரவில்லை. தமிழக மக்களின் மனத்தை எடுத்து வந்துள்ளேன். இனத்தால், பண்பால், நடத்தையால், உதவும் குணத்தால் நாம் அனைவரும் தமிழினத்தைச் சாா்ந்து இருக்கக் கூடியவா்கள். தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது அரபு நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எனக்குள்ளது.
அந்த அளவுக்கு எனக்கு வரவேற்பை அளித்துள்ளீா்கள். எங்கு இருந்தாலும் தமிழா்களின் மனங்களில் இருக்க வேண்டும். இதெல்லாம் தமிழுக்கும், தமிழா் நலன்களுக்கும் எதிராக சிந்திப்போருக்கு புரியாது.
உண்மையான தமிழனாக இருந்தால்தான் அவா்களுக்குப் புரியும். பொய்களையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து, வெறுப்பு எனும் நஞ்சை விதைத்து அதன்மூலம் ஆதாயம் தேடுவோருக்கு இதெல்லாம் புரியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.