தமிழ்நாடு

பல விமரிசனங்களையும் தாண்டி வளர்ப்பு நாயை கண்டுபிடிக்க உதவிய பழனிவேல் தியாகராஜன்

28th Mar 2022 12:19 PM

ADVERTISEMENT


சென்னை: ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தீபு ஜெயின் குடும்பத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அந்த மகிழ்ச்சி அந்த குடியிருப்பு முழுக்க எதிரொலிக்கிறது.

இதற்குக் காரணம், அவர்கள் வளர்ந்து வந்த 7 மாத வளர்ப்பு நாய் மீண்டும் அவர்களது வீட்டுக்கே திரும்பி வந்துள்ளது. அதுவும் காவலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் அவர்களது குடும்பத்தினர் என பலரும் 40 நாள்கள் தேடுதல் பணிகளுக்குப் பின் ரூபி கிடைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தீபு தனது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் செல்ல வேண்டியது இருந்ததால் சென்னை ஓஎம்ஆர் பகுதியில் உள்ள நாய்கள் பராமரிப்பு மையத்தில் அதனை விட்டுச் சென்றனர்.

ADVERTISEMENT

அவர்கள் ராஜஸ்தான் சென்று ஓரிரு நாள்களிலேயே மையத்திலிருந்து நாய் காணாமல் போனதாக தகவல் வந்தது. உடனடியாக சென்னை திரும்பிய தீபு குடும்பத்தினர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் உணவை எடுத்துச் சென்று வழங்கும் நபர் ஒருவர் தனது வாகனத்தில் ரூபியை எடுத்துச் சென்றதை ஒருவர் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

இது குறித்து அந்த குடும்பத்தினர் சுட்டுரையில் ஒரு பதிவை இட, அதில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சுட்டுரை கணக்கையும் டேக் செய்திருந்தனர்.

இதையடுத்து, அவர் சென்னையைச் சேர்ந்த சில விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் ரூபியைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டார். இது குறித்து தாம்பரம் காவல் ஆணையரிடமும் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

 

இது தொடர்பாக அப்பகுதிக்கு வந்து சென்ற உணவு விநியோகிப்பாளர்கள் பலரிடமும் தன்னார்வலர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அந்த நாயை எடுத்துச் சென்ற நபரிடமும் தன்னார்வலர்கள் பேசியுள்ளனர். அப்போது அந்த நாயை எடுத்துச் சென்ற நபர், இந்த சம்பவத்துக்குப் பின்னால் காவல்துறையினர் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், தானே தன்னார்வலராக மாறி, நாயை கண்டுபிடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்து, மயிலாடுதுறையில் ஒரு குடும்பத்தினரிடமிருந்து அந்த நாயை எடுத்து வந்து சென்னையில் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் கூறுகையில், நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ரூபியை கண்டுபிடிக்க முடிந்தது என்கிறார்.

இந்த சம்பவம், விலங்குகள் பராமரிப்பு மையங்களுக்கு ஒரு பாடம். இது தொடர்பாக சரியான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க குழு அமைக்கப்படும் என்றும் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

திரும்ப வந்த நாய், தனது குடும்பத்தினருடன் குதூகலமாக துள்ளி குதித்து வரும் விடியோவையும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகரஜன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் நான் தலையிட்டபோது, பலரும் என்னை விமரிசனம் செய்தார்கள். மாநிலத்தின் நலனுக்காக கொள்கைகளை உருவாக்குவது மற்றும் அதனை செயல்படுத்துவதில்தான் எனது கவனம் இருக்க வேண்டும் என்றும் அதனை விடுத்து இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடாது என்றும் கூறினார்கள். ஆனால், முதலில் நான் மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அந்த நாய் உரிமையாளர்களிடம் சேர்ந்துவிட்டது என்கிறார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT