தமிழ்நாடு

தினமணி இணையதள செய்தி எதிரொலி: முதியவரின் மோட்டார் சைக்கிளை பழுது நீக்கிய மேட்டூர் மதுவிலக்கு ஆய்வாளர்

28th Mar 2022 07:25 PM

ADVERTISEMENT

 

தினமணி இணையதள செய்தி எதிரொலியாக மேட்டூரைச் சேர்ந்த முதியவரின் மோட்டார் சைக்கிளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பழுது நீக்கிக் கொடுத்துள்ளார்.

தனது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி சரிசெய்து தராமல் காலதாமதம் செய்ததாக மேட்டூர் மதுவிலக்கு மீது முதியவர் ஒருவர் தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கும் புகார் அனுப்பிய செய்தி தினமணி இணையதளத்தில் வெளியாகியிருந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் டிசிஎம் காலனியைச் சேர்ந்தவர் கே.சி.பாரதி (73). வீரக்கல் புதூர் பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலர். 

ADVERTISEMENT

இவர் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தை குஞ்சாண்டியூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு மளிகை கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது மேட்டூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி வந்த ஜீப் அதிவேகமாகவும் ஆரன் அடிக்காமலும் பின்னோக்கி வந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. காவல் துறை வாகனம் வேகமாக வந்ததை பார்த்த பொது மக்கள் சிதறி ஓடினார்கள். 

அப்போது ஜீப்பில் இருந்து இறங்கி வந்த காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியும் ஓட்டுனர் பாபுவும் வழக்கு எதுவும் வேண்டாம், மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து கொடுத்து விடுகிறோம் என்று முதியவர் பாரதிக்கு உறுதியளித்தனர். பின்னர் போலீசார் மூலம் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றனர்.  மூன்று மாத காலமாகியும் மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து கொடுக்கவில்லை.

இதுகுறித்து மேட்டூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, போலீஸ் வாகன ஓட்டுநர் பாபு ஆகியோரிடம் முதியவர் பாரதி பலமுறை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளரும் ஓட்டுனரும் முதியவரை மிரட்டினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தமிழக முதல்வருக்கும் தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை புகார் அனுப்பினார். 

இச்சம்பவம் தொடர்பான செய்தி ஞாயிற்றுக்கிழமை தினமணி இணையதளத்தில் வெளியானது. செய்தி எதிரொலியாககாவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உடனடியாக முதியவரின் மோட்டார் சைக்கிளை பழுது நீக்கி ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேட்டூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர் திங்கள் கிழமை முதியவரிடம் இருந்து எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிளை பழுது நீக்கி திங்கட்கிழமை 6.30மணி அளவில் மாலை முதியவரிடம் வழங்கினார்கள்.

மகிழ்ச்சி அடைந்த வீரக்கல் புதூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கே.சி.பாரதி தினமணி டாட் காமிற்கு நன்றி கூறினார்.

Tags : mettur
ADVERTISEMENT
ADVERTISEMENT