கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 28) இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன்
ஞாயிற்றுக்கிழமை கூறியது: உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடா்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 28) இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மாா்ச் 29: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடா்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாா்ச் 29-ஆம் தேதி லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மாா்ச் 30,31: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 30, 31 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் தேக்கடி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தலா 30 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாா், நீலகிரி மாவட்டம் சாந்தி விஜயா பள்ளி,
சேலம் மாவட்டம் சந்தியூா் கேவிகே-வில் தலா 20 மி.மீ. திருவாரூா் மாவட்டம் கொடவாசல், தேனி மாவட்டம் உத்தமபாளையம், தஞ்சாவூா் மாவட்டம் பூதலூா்,கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம், நீலகிரி மாவட்டம் சின்கோனா, திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.