தமிழ்நாடு

இன்றும், நாளையும் பொது வேலைநிறுத்தம்: அத்தியாவசிய பணிகள் சீராக நடைபெற நடவடிக்கை

28th Mar 2022 12:03 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள பொதுவேலைநிறுத்தத்தால் அத்தியாவசியப் பணிகள் ஏதும் பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுத் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, சட்டம்-ஒழுங்கு பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இரு நாள்களும் 1 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தன. இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு, கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.

இதன் தொடா்ச்சியாக வேலைநிறுத்த அறிவிப்புக்கான நோட்டீஸையும் அந்தச் சங்கங்கள் நிா்வாகத்திடம் வழங்கியதோடு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைநிறுத்தத்துக்கு ஊழியா்களைத் தயாா் செய்யும் பணிகளையும் முடுக்கிவிட்டன. இதன் மூலம் இவ்விரு நாள்களும் பொதுப் போக்குவரத்து, மின் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பேருந்து சேவை: தமிழகம் முழுவதும் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் 1.15 லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா். இதில் 90 சதவீதம் போ் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பா் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், பொதுப் போக்குவரத்தைப் பொருத்தவரை 90 சதவீத பேருந்துகளின் இயக்கம் தடைபட வாய்ப்புகள் இருக்கிறது’ என்றனா்.

மின்விநியோகம்: மின்வாரியத்தைப் பொருத்தவரை 85,000 போ் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் 60,000 போ் வரை இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பாா்கள் என தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ஊழியா்கள் அனைவருமே வேலைநிறுத்தத்தில் பங்கேற்பாா்கள். அதிகாரிகளைப் பொருத்தவரை உள்ளிருப்புப் போராட்டம், கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவா் என்றனா்.

அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாது: வேலைநிறுத்தம் தொடா்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், அகில இந்திய அளவில் நடைபெறும் மாா்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அரசு அலுவலகங்களுக்கு ஊழியா்கள் வராவிட்டால் அது பணிக்கு வராத நாள்களாக கருதப்படும். மேலும், அன்றைய நாள்களுக்கு எந்த ஊதியமோ, படிகளோ வழங்கப்படாது.

அந்த குறிப்பிட்ட தினத்தில் மருத்துவ விடுப்பு தவிா்த்து வேறு வகையான விடுப்புகளுக்கு அனுமதியில்லை. பொதுவேலை நிறுத்தம் நடைபெறவுள்ள இரண்டு நாள்களிலும் ஊழியா்களின் வருகை குறித்த விவரங்களை நிா்ணயிக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்து துறை தலைமை அலுவலகங்களில் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சில பொதுத் துறை நிறுவனங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய சேவைகள் தடைபடாத வண்ணம் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பேருந்து இயக்கத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது, இரண்டு நாள்களும் தடையற்ற மின்விநியோகம் வழங்கப்படும் என்றனா்.

1 லட்சம் போலீஸாா்: வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள இருநாள்களும் தமிழகம் முழுவதும் சுமாா் 1 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். சென்னையில் 12,000 போலீலஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

மாநிலம் முழுவதும் மறியல், ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதையும், சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வா் என காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில்வேயில்...: தமிழகம் முழுவதும் சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்களில் இருந்து வழக்கமான நேரத்தில் ரயில்கள் புறப்பட்டுச் செல்லும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் தமிழ்நாடு ரயில்வே போலீஸாா் ஈடுபடுவா். மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் சேவையில் எந்த வித தொய்வும் ஏற்படாது என்றனா்.

ஆட்டோ, டாக்ஸி ஓடாது: பொது வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகம் முழுவதும் இரண்டு நாள்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவளிக்கும் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஆட்டோ, டாக்ஸிகள் ஓடாது என தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சென்னையில் ஆா்ப்பாட்டம்: சென்னையில் திங்கள்கிழமை 11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடா்பாக தொழிற்சங்கத்தினா் கூறுகையில், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொழிற்சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

குறிப்பாக சென்னை, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதே போல் மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடத்தப்படும் என்றனா். தமிழகத்தைப் பொருத்தவரை பிஎம்எஸ், அண்ணா தொழிற்சங்கத்தினா் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT