சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி ஆகியோா் இன்று நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன்படி, விசாரணை ஆணையம் முன்பு சசிகலா உறவினா் இளவரசி இன்று நேரில் ஆஜராகி, விசாரணை ஆணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். சுமார் 8 முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் ஆஜராகியிருந்தார்.
இதையும் படிக்க | எதுவும் தெரியாது: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம்
இன்று காலை தொடங்கப்பட்ட விசாரணை சுமார் 3.30 மணிநேரம் நடைபெற்றது. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான 78 கேள்விகள் இன்று கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நாளை காலை விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.