தமிழ்நாடு

'அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்'

21st Mar 2022 07:55 PM

ADVERTISEMENT


உயர்கல்வி இட ஒதுக்கீடு, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது போன்ற திட்டங்களை அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வது அனைவருக்கும் பெருமையே.

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில், இன்று வரை ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு இலவசக்கல்வி அளித்து அரசுடன் இணைந்து பணியாற்றி, தமது பாரம்பரியத்தை அரசு உதவி பெறும் பள்ளிகள் நிலைநிறுத்தி வந்துள்ளன

பெரும்பான்மையான அரசு உதவி பெறும் பள்ளிகள் மதம் சார்ந்த அல்லது மொழி சார்ந்த  சிறுபான்மையினரால் நடத்தப்பட்டு வருவனவாகும்.

ADVERTISEMENT

மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை வரவேற்றோம். ஆனால், அரசின் இலவசக் கல்விபெறும் மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியாக உள்ள நிதிஉதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் பயன் பெறும் வாய்ப்பு  மறுக்கப்பட்ட போது மனம் உடைந்து போனோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால், கிராமப்புற  மாணவர்களுக்கு  மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கிடைத்தபோது இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

நாட்டில் சமூக நீதிக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தாங்கள் இன்று மருத்துவ உயர் படிப்பிற்கு உச்சநீதிமன்றத்தில் போராடி தமிழகத்திற்கு 50% இட ஒதுக்கீட்டினைப்  பெற்றுத் தந்ததும் போற்றுதலுக்குரியதே.

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீட்டினை வல்லுநர் குழு பரிந்துரைத்தவாறு 10% ஆக உயர்த்தி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உரிய உள் ஒதுக்கீட்டினை வலியுறுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்கள் கருத்தாக உள்ளது.

கடந்த 18ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம், பெண்களின் உயர்கல்விக்கு உந்துசக்தியாக அமையும். 

ஆனால், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற மாணவியருக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்துமெனில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசக் கல்வி பயின்றுவரும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை மாணவியருக்கு சமூக நீதி மறுக்கப் படுவதாகவே உள்ளது. 

உயர்கல்விக்கான மாத உதவித்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்திலும், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விக்கான இட ஒதுக்கீட்டிலும் சமூக நீதிப் பார்வையோடு, அரசு பள்ளி மாணவ மாணவியருடன் நிதி உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியரையும் இணைத்து நடப்பு கூட்டத்தொடரிலேயே கொள்கை அறிவிப்பு செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT