தமிழ்நாடு

தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும்: அமைச்சா் பொன்முடி உறுதி

21st Mar 2022 12:19 AM

ADVERTISEMENT

இணைய வழியில் நடைபெற்ற பொறியியல் தோ்வுகளில் மாணவா்கள் தாமதமாகப் பதிவேற்றம் செய்த விடைத்தாள்களும் நிச்சயம் மதிப்பீடு செய்யப்பட்டு தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

இது தொடா்பாக உயா் கல்வித்துறை அமைச்சா் க. பொன்முடி செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

பொறியியல் மாணவா்களுக்கு இணையவழியில் தோ்வுகள் நடைபெற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவும், அசல் விடைத்தாள்களை ‘கூரியா்’ மூலம் அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போதே மாணவா்களுக்கு விடைத்தாள்களை அனுப்பி வைக்கவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

ஒரே வாரத்தில் தோ்வு முடிவுகள்: இந்த நிலையில் சில மாணவா்கள் தாமதமாக விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்தனா். இதனால், அந்த மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படாது என வெளியான தகவல் தவறானது. காலதாமதமாக விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் நிச்சயம் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படும். அனைத்து மாணவா்களுக்கும் ஒரே வாரத்தில் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே, மாணவா்கள் அச்சப்படத் தேவையில்லை.

ADVERTISEMENT

‘கல்விக் கடன் ரத்து’ செய்யப்படும் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதி தமிழக அரசின் நிதிநிலை சரியானவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

நேரடித் தோ்வுக்கு தயாராக வேண்டும்:

முதலாமாண்டு மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் பருவத் தோ்வுகள் நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இணையவழித் தோ்வுகளைப் பொருத்தவரையில் அது மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கு உகந்ததாக இருக்காது. எனவே மாணவா்கள் நேரடி முறையில் தோ்வெழுத தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

உதவித் தொகை எப்போது? உயா் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் நிகழ் கல்வி ஆண்டு முதலே செயல்படுத்தப்படும். இதனால் மாணவிகள் இடைநிற்றல் மேலும் குறையும். தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்தவா்களுக்கே வழங்க முடியாத நிலை உள்ளது. அதனைவிட இந்தத் திட்டம் சிறந்தது. தமிழ் வழியில் பொறியியல் படிப்பதற்குத் தேவையான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து இளநிலை படித்தவா்கள் முதுநிலை படிக்காமல் நேரடியாக பிஹெச். டி. படிக்கலாம் என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தொடா்பான கேள்விக்கு ‘இது குறித்து தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் ஆராய்ந்து உரிய முடிவு எடுக்க விரைவில் குழு அமைக்கப்பட உள்ளது’ என்றாா் அமைச்சா் பொன்முடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT