தமிழ்நாடு

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகம்: முக்கிய அம்சங்கள்!

19th Mar 2022 10:32 AM

ADVERTISEMENT

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூ. 71 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். 

அதைத் தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

மாநில  வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர், 

ADVERTISEMENT

விவசாயிகளின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யவும் அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் ஏதுவாக பல்வேறு கூறுகளை உள்ளடக்கி மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடங்கும்.

இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு

இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, இந்த அரசு சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து, ஆரோக்கியமான வாழ்விற்கு நஞ்சற்ற, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்திட இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில் பசுந்தாள் உர விதைகளும்,  மண் புழு உரம், அமிர்தக் கரைசல் போன்றவற்றை  தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள உழவர், உழவர் உற்பத்தியாளர், பாரம்பரிய இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திலுள்ள 100 குழுக்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவியும்  வழங்கப்படும்.

இதுதவிர, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து 150 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் ஏழு ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட ஐந்து கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 விவசாயிகளுக்குத் தார்பாய்கள் வழங்குதல்

உழைப்பின் பயனாக உற்பத்தி செய்தவை தூறலில் நனைந்தால் கண்களில் மழை உருவாகும். அறுவடை செய்த விளை பொருட்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கும், உலர் களமாகப் பயன்படுத்துவதற்கும் 60 ஆயிரம் விவசாயிகளுக்குத் தார்பாய்கள் ஐந்து கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.

தென்னை வளர்ச்சி மேம்பாடு

தென்னையில் காய்ப்புத்திறனை அதிகரிக்கவும், எண்ணெய்ச்  சத்தை உயர்த்தவும், குரும்பை உதிர்வதைக் குறைக்கவும், தென்னை நுண்ணூட்டக்கலவை, பசுந்தாள் உரப் பயிர் விதை, உயிர் உரங்கள், போராக்ஸ் ஆகியவை மானியத்தில் வழங்கிடவும். ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி, உயிரி பூச்சிக்கொல்லிகள், ஒட்டுண்ணிகள் வழங்கிடவும், தென்னை, மா, முந்திரி போன்ற பல்லாண்டுப்பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி குறித்த செயல் விளக்கத் திடல்கள் அமைப்பதற்கும்  2022-23ஆம் ஆண்டில் ஒன்பது கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக, நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2022-23ஆம் ஆண்டில் அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கரில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, சுமார் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும். இதற்காக,
75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

குறுவைப் பருவத்தில் மாற்றுப் பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு

கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிருக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள் சாகுபடியை  ஊக்குவிக்கும் வகையில் 66 ஆயிரம் ஏக்கரில் மாற்றுப்பயிர் சாகுபடி 
10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி

  • நெல் அறுவடைக்குப்பின், பயறுவகைகள் சாகுபடியினை ஊக்கப்படுத்த ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் கூடுதலாக13 ஆயிரம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தி செய்யப்படும்.
  • நெல்லில் உற்பத்தித்திறனை அதிகரிக்க, குழித்தட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து  நடவு  செய்யும்  புதிய  தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும். இதற்காக மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் மாநில அரசு விதைப் பண்ணையில் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து, 250 ஏக்கரில் செயல்விளக்கத் திடல் அமைக்கப்படும்.
  • இயற்கை வழியில் பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், கூடுதல் வருமானம் பெற்றிடவும், ஐந்து இலட்சம் ஏக்கர் பரப்பில் வரப்புப் பயிர் சாகுபடி செய்திட பயறு விதைகள் மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டம் மூன்று கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில்  செயல்படுத்தப்படும்.
  • நெல்லில் கூடுதல் விளைச்சல் பெறுவதற்காக துத்தநாக சல்பேட், ஜிப்சம் தலா ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிற்கு ஐந்து கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.

விதை விநியோகம்

2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு  முகமை (டான்சிடா) மூலம்  30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

உழவர்  பெருமக்களுக்கு  வேளாண்  கருவிகள் வழங்குதல்

விவசாயப் பெருமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள “வேளாண் கருவிகள் தொகுப்பு”, 2022-23 ஆண்டிலும் அரை இலட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு  15  கோடி  ரூபாய் மானியத்தில்  வழங்கப்படும்.

இளைஞர்களை வேளாண் தொழில்  முனைவோராக்குதல்

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, 2022-23 ஆம் நிதி ஆண்டில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய்  வீதம் நிதி உதவி வழங்கப்படும். 

ஊரக  இளைஞர்களுக்குத்  திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை இலாபகரமாக மாற்ற, இரண்டு ஆயிரத்து 500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கடந்த ஆண்டைப் போலவே 2022-23 ஆம் ஆண்டிலும்  வழங்கப்படும்.

வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு

இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து, பரிசு அளிக்கும், பாராட்டி மகிழும்.

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்

காடுகள் மழையை ஈர்க்கும் இயற்கை காந்தங்கள். பூமியைக் குளிர்விக்கும் மரகதக்குடைகள். தமிழ்நாட்டில் வேளாண்காடுகளை உருவாக்கி வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். பருவநிலை மாற்றங்களைத் தாங்கி விவசாயிகளுக்கு நிரந்தர வைப்புத்தொகையாக எதிர்காலத்தில் நல்ல வருமானத்தைத் தரும் மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும். 2022-23 ஆம் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம், மகோகனி, தேக்கு போன்ற மதிப்புமிக்க மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT