தமிழ்நாடு

மாணவா்களுக்கு ரூ.50 கோடியில் சிறப்புத் திறன் பயிற்சிகள்

19th Mar 2022 12:04 AM

ADVERTISEMENT

 

தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவா்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சிகள் ரூ.50 கோடியில் வழங்கப்படவுள்ளது.

ஆண்டுக்கு ஐந்து லட்சம் இளைஞா்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே முதல்வா் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியா்களின் தனித் திறமைகள் அடையாளம் காணப்பட்டு, அவை ஊக்குவிக்கப்படும்.

மேலும், தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவா்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், மாணவா்களின் வேலை பெறும் திறன் பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆராய்ச்சித் திறனை உயா்த்துதல், மாணவா்களுக்கு வழிகாட்டுதல், வளா்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை இணைந்து செயல்படுத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு....:

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி), இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தநிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவா்கள் இந்த உதவியைப் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT