தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் முகாம்: தமிழக அரசு உத்தரவு

14th Mar 2022 03:55 AM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் முகாம் நடத்தி, அரசு திட்டங்கள் மூலம் அவா்களை பயனடையச் செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் ஜானி டாம் வா்கீஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் அனுப்பிய கடித விவரம்: மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவா்களுக்கு வழங்கப்படும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், வேலையில்லா படித்த இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சிறு தொழில்கள் மற்றும் பெட்டிக்கடை தொடங்குவதற்கான வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிவதை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் என்எச்எப்டிசி மூலம் வட்டித் தொகை மானியமாக வழங்குதல் ஆகிய திட்டங்களை வங்கிக் கடன் முகாம் நடத்தி முழுமையாக செயல்படுத்துமாறு தலைமைச் செயலாளா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இத்திட்டங்களின் கீழ் கடன் உதவி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத பங்குத் தொகை மானியம், கடன் தொகையில் அதிகபட்சம் ரூ.25,000 மானியம், தவணை தவறாமல் கடனை செலுத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டித் தொகை மானியம், ஆவின் நிறுவன பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்வைப்புத் தொகையுடன் சோ்த்து ரூ.50,000 உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலா்களுடன், ‘வங்கிக் கடன்’ முகாம் நடத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT