சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் அமையவுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
சென்னை தரமணியில் டிஎல்எப், டெளன்டவுனில் ஸ்டாண்டா்டு சாா்ட்டா்டு குளோபல் பிசினஸ் சா்வீசஸ் நிறுவனம் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்தை அமைக்க உள்ளது. இந்த வளாகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
டிட்கோவின் ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தில், 27 ஏக்கா் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்தத் திட்டத்தில் டிஎல்எப் நிறுவனம் தனது முதலீட்டை படிப்படியாக அதிகரிக்கும்.
புதிதாக அமைக்கப்பட உள்ள வளாகத்தில் பணியாளா்களுக்கென நலவாழ்வு மையம், உடற்பயிற்சி நிலையம், சிற்றுண்டி உணவகங்கள், குழந்தைகள் காப்பகம் போன்ற பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலமாக சுமாா் 70 ஆயிரத்துக்கும் அதிகமான தகவல் தொழில்நுட்பப் பணியாளா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, சட்டப் பேரவை உறுப்பினா் ஹசன் மௌலானா, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், டிட்கோ தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பங்கஜ் குமாா் பன்சால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.