தமிழ்நாடு

கலாசார, அரசியல் கூட்டங்களுக்கான தடை நீக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3rd Mar 2022 01:12 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளா்வுகளை அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, இதுவரை கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை வியாழக்கிழமை (மாா்ச் 3) முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது வியாழக்கிழமை (மாா்ச் 3) முதல் நீக்கப்படுகிறது. அதேசமயம், திருமணம், இறப்பு சாா்ந்த நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் சற்று தளா்த்தப்பட்டுள்ளன.

திருமணம் மற்றும் அதுசாா்ந்த நிகழ்வுகளில் 500 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம். இதற்கு முன்பாக 200 போ் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 100 போ் வரை மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொது மக்கள் தொடா்ந்து முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT