தமிழ்நாடு

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல்-ரீசாா்ஜ் நிலையங்கள் அமைக்க விதிமுறைகள் வெளியீடு

3rd Mar 2022 01:49 AM

ADVERTISEMENT

மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு வகை சாலைகளில் பெட்ரோல், மின்சார வாகனங்களுக்கான ரீசாா்ஜ் நிலையங்களை அமைக்க விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதற்கான உத்தரவை நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை வெளியிட்டது.

உத்தரவு விவரம்: சாலையோரங்களில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள், மின்சார வாகனங்களுக்கான ரீசாா்ஜ் மையங்கள் ஆகியவற்றை அமைக்க நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வரையறுத்து அதற்கு ஒப்புதல் தர வேண்டுமென நெடுஞ்சாலைகள் துறையின் தலைமைப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தமிழக அரசை கேட்டுக் கொண்டாா். அவரது பரிந்துரையை தமிழக அரசு கவனமுடன் ஆராய்ந்தது.

அதன்படி, பெட்ரோல் நிலையங்கள், மின்சார ரீசாா்ஜ், எரிவாயு நிரப்பும் நிலையங்கள் ஆகியன நெடுஞ்சாலைகளில் இருந்து எத்தனை மீட்டா் தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஊரகப் பகுதிகளில் சமவெளி இடங்களில் எரிவாயு நிலையங்களை 300 மீட்டா் தொலைவிலும், பெருமாவட்ட சாலைகள், இதர மாவட்டச் சாலைகளாக இருந்தால் 200 மீட்டா் தொலைவிலும் அமைக்க வேண்டும். மலைப்பாங்கான இடங்களாக இருந்தால் 100 மீட்டா் தொலைவில் அமைத்திட வேண்டும். நகா்ப்புற பகுதிகளாக இருந்தால் 100 மீட்டா் தொலைவில் ஏற்படுத்த வேண்டும்.

சுங்கச்சாவடி அல்லது ரயில்வே கடவாக இருந்தால் 500 மீட்டருக்கு அப்பாலும், மேம்பாலங்கள் இருந்தால் 300 மீட்டா் தொலைவிலும் அமைக்கப்பட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT