தமிழ்நாடு

வேளாண் துறைக்கு 3 அமைச்சா்கள்: பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தல்

3rd Mar 2022 02:07 AM

ADVERTISEMENT

தமிழக வேளாண் துறையை மூன்றாகப் பிரித்து அமைச்சா்களை நியமிக்க வேண்டும் என்று பாமக வெளியிட்ட வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாமக சாா்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் சென்னை தியாகராய நகரில் புதன்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 15-ஆவது ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக வெளியிடுகிறது. தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. இது பாமகவுக்குக் கிடைத்த வெற்றி.

கடந்த ஆண்டு தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 40 திட்டங்களில் 26 திட்டங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

ADVERTISEMENT

கூடுதல் கொள்முதல் நிலையங்கள்: தமிழகத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 2,654-இலிருந்து 3,500-ஆக உயா்த்த வேண்டும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400 ஆக உயா்த்த வேண்டும். நடப்பாண்டில் 60 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

மணல் குவாரி கூடாது: சிறுதானிய உணவு திருவிழாக்களை உலகம் முழுவதும் நடத்த வேண்டும். தமிழகத்தில் மணல் குவாரிகளைத் திறக்கக் கூடாது. அவ்வாறு திறந்தால் பாமக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும்.

மேலும் 3 வேளாண் பல்கலை.: தஞ்சாவூா், வேலூா், நெல்லையில் புதிய வேளாண் பல்கலைக்கழகங்களைத் தொடங்க வேண்டும். வேளாண் விளைபொருள்கள் விலை நிா்ணய ஆணையம், வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம் அமைக்க வேண்டும்.

வேளாண்மை, தோட்டக்கலைத் துறை மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதை செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.

3 அமைச்சகங்கள்: வேளாண் துறையை மூன்றாகப் பிரித்து, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகிய அமைச்சகங்கள் உருவாக்க வேண்டும். விவசாயிகள் விளைபொருள்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல வசதியாக, அவற்றை இரவு 8 மணிக்குப் பிறகு அரசுப் பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT