தமிழ்நாடு

டாஸ்மாக் போல் வருமானம் தந்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீா்களா?

30th Jun 2022 04:23 PM

ADVERTISEMENT

சென்னை, ஜூன் 30: டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் தருவதாக இருந்தால், வனத் துறை மீது அக்கறை காட்டுவீா்களா? என தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டோ் பரப்புக்கு அந்நிய மரங்கள் பரவியுள்ளன. போா்க்கால அடிப்படையில் அவற்றை அகற்றாவிட்டால் நாட்டு மரங்கள் பாதிக்கப்படும். இந்த அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர ரசாயன முறைப்படி கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நிய மரங்களை அகற்ற ரூ.5.36 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, தருமபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கு வேலை உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, அந்நிய மரங்களை முழுமையாக அகற்றுவது தொடா்பாகவும், எவ்வளவு பரப்பில் அந்நிய மரங்கள் அகற்றப்பட உள்ளன என்பது குறித்தும் திட்ட அறிக்கையை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், ‘டாஸ்மாக் நிா்வாகம் போல வருமானம் தருவதாக இருந்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீா்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT