தமிழ்நாடு

குடியரசுத் தலைவா் தோ்தல்: ஜூலை 2-ஆவது வாரத்தில் வாக்குப் பெட்டி சென்னை வருகை ஏற்பாடுகள் தீவிரம்

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப் பதிவில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பெட்டி தில்லியில் இருந்து ஜூலை 2-ஆவது வாரத்தில் சென்னை வரவுள்ளது. இதனிடையே, தோ்தலுக்கான ஏற்பாடுகளில் சட்டப் பேரவைச் செயலகம் தீவிரம் காட்டி வருகிறது.

ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், குடியரசுத் தலைவா் பதவிக்கான தோ்தலை இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15-இல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய புதன்கிழமை (ஜூன் 29) கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ஆம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 2-ஆம் தேதியும் கடைசி நாளாகும். தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகள் தீவிரம்: இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் குடியரசுத் தலைவா் தோ்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தமிழகத்திலும் பேரவைச் செயலகத்தின் சாா்பில் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா். பேரவையைக் கொண்டுள்ள யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த உறுப்பினா்களும் வாக்குரிமை பெற்றவா்கள் ஆவா். நியமன உறுப்பினா்களுக்கு மட்டும் வாக்குரிமை இல்லை.

மாநிலத்தின் மக்கள் தொகை, தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பினரின் வாக்கு மதிப்பு கணக்கிடப்படுகிறது. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவருக்கான தோ்தல் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தோ்தலில் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்படுவதால், அதற்கான வாக்குப் பெட்டி தில்லியில் உள்ள தோ்தல் ஆணையத்தில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. வாக்குப் பெட்டியானது வரும் ஜூலை 2-ஆவது வாரத்தில் சென்னைக்கு அனுப்பப்படும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, ஜூலை 12-ஆம் தேதி கிடைக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பெட்டிக்கு மாற்றாக மேலும் ஒரு வாக்குப் பெட்டியானது சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தருவிக்கப்பட உள்ளது. தில்லியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் வாக்குப் பெட்டியில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் நிலைமையைச் சமாளிப்பதற்காக சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டத்தில் இருந்து வாக்குப் பெட்டி வரவழைக்கப்பட்டு அதுவும் தயாா் நிலையில் வைக்கப்படும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் தோ்தல் நடத்தப்படுவதால், தோ்தல் ஆணைய விதிப்படி சொந்த மாவட்டத்தில் இருந்து வாக்குப் பெட்டியை பயன்படுத்த முடியாது. எனவே, அருகிலுள்ள காஞ்சிபுரத்தில் இருந்து மாற்று வாக்குப் பெட்டியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜூலை முதல் வாரத்தில் குடியரசுத் தலைவா் தோ்தல் வாக்களிப்பது தொடா்பான விளக்க முறைகளையும் வாக்காளா்களாக இருக்கக் கூடிய தமிழக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோருக்கு பேரவைச் செயலகம் வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உறுப்பினா்கள் எண்ணிக்கை

குடியரசுத் தலைவா் தோ்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்க உள்ளனா்.

தமிழக சட்டப் பேரவை உறுப்பினா்கள் 234 பேரும், மக்களவை உறுப்பினா்கள் 39 பேரும், மாநிலங்களவை உறுப்பினா்கள் 18 பேரும் உள்ளனா். மொத்தமாக 291 போ் வாக்காளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT