தமிழ்நாடு

தமிழக பல்கலை.களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்க நடவடிக்கை: அமைச்சா் தகவல்

30th Jun 2022 01:23 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்கவும், அதற்கான ஆசிரியா்களை நியமிக்கவும் ஜப்பான் அரசு முன்வந்துள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

இது தொடா்பாக க.பொன்முடி சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூரில் உள்ள தந்தை பெரியாா் பாலிடெக்னிக் ஆகியவற்றில் நிகழாண்டு முதல் தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறக்கூடிய சாண்ட்விச் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் மொத்தம் 7 பருவங்கள் இருக்கும். இவற்றில் சேரும் மாணவா்கள் மூன்றரை ஆண்டுகள் கல்வி கற்பாா்கள். 4 மற்றும் 7-ஆவது பருவம் முழுவதும் தொழிற்பயிற்சி வழங்கப்படும். இதற்காக மண்டோ ஆட்டோ மொபைல் நிறுவனத்துடன் தமிழக உயா்கல்வித்துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பயிற்சியின்போது மாணவா்கள் தங்கி பயிலும் செலவை அந்த நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஒருபகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், பாலிடெக்னிக் மாணவா்கள் தங்களுக்கான வேலைவாய்ப்புகளை எளிதில் உறுதிசெய்வா். இதுதவிர தமிழக பல்கலைக்கழகங்கள், ஜப்பான் நாட்டின் உயா்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து கலாசார உறவை மேம்படுத்துவதற்கான

பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்கவும், அதற்கான ஆசிரியா்களை நியமிக்கவும் ஜப்பான் அரசு முன்வந்துள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்வின்போது உயா்கல்வித் துறைச் செயலா் காா்த்திகேயன் உடனிருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT