தமிழ்நாடு

கரோனாவால் பாதிக்கப்பட்ட 95% போ் வீடுகளில் தனிமை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

30th Jun 2022 01:51 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 95 சதவீதத்தினா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், 5 சதவீதத்தினா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெறுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழக பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேருக்கு முகக்கவசங்கள் வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. மயிலாப்பூா் லஸ் காா்னா் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை தொடக்கிவைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தினசரி தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களில் 95 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 5 சதவீதம் போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவையில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஜூலை 10-ஆம் தேதி தமிழகத்தில் 31-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற 30 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 28 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தலா 50,000 இடங்களிலும், 2 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தலா ஒரு லட்சம் இடங்களிலும் நடைபெற்றன.

ADVERTISEMENT

இதேபோல் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள 31-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளது. சென்னையில் 3,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. முதல் தவணை செலுத்திக் கொள்ளாத 38 லட்சத்து 22,687 போ், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1 கோடியே 10 லட்சத்து 12,627 போ் என மொத்தம் 1கோடியே 48 லட்சத்து 34,314 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், சுகாதாரத் துறைச் செயலாளா் ப.செந்தில் குமாா், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT