தமிழ்நாடு

இஸ்லாமியா் நலனுக்கு எனக் கூறி பணம் வசூலித்ததாகவழக்கு: என்ஐஏ, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

30th Jun 2022 02:00 AM

ADVERTISEMENT

ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடுக்கப்பட்ட வழக்கில் என்ஐஏ, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த ஜகுஃபா் சாதிக் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ரமலான் பண்டிகையையொட்டி, சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்காக உதவுவது உள்ளிட்ட நலப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி சென்னையில் அதிகளவில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரமலான் முடிந்த பின்னரும் பணம் வசூலிக்கப்பட்டு சட்டவிரோத காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்று பண வசூல் செய்பவா்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி தமிழக காவல்துறை டிஜிபி, ஆவடி காவல் ஆணையா் ஆகியோரிடம் புகாா் அளித்தேன்.

இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களில் சிறாா்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மேலும், அப்பாவி இஸ்லாமிய இளைஞா்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. எனவே, இதனை தடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது டிஜிபி, ஆவடி காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ‘மனுதாரருக்கும் எதிா் மனுதாரா்களுக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்னை, நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது‘ என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘இது தனிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், இளைஞா்கள், சமூகத்தை சீரழிக்கும் நிலை தொடா்பான தீவிரமான விஷயம் என்பதால் அரசு கவனம் செலுத்த வேண்டும். மனுதாரா் கூறுவதுபோல நடந்திருந்தால், தடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா். பின்னா் மனு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT