தமிழ்நாடு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

DIN

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், திருப்பத்தூர் நகரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட 129 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 28 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 13 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 16,820 பயனாளிகளுக்கு 103 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சென்றடைந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் திருப்பத்தூர் நகரத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தை முதல்வர் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இப்புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 10.38 ஏக்கர் பரப்பளவு பகுதியில் 2,94,565 சதுரஅடி கட்டடப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இவ்வளாகத்தின் தரைத் தளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தேர்தல் அலுவலகம், தபால் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட கருவூலம், ஏடிஎம் வசதியுடன் கூடிய வங்கி, மக்கள் குறைத்தீர்வு கூடம் ஆகியவையும், முதல் தளத்தில் மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறப்பு திட்ட அலுவலகம், மாவட்ட சமூகநல அலுவலகம், எல்காட் மையம், முத்திரைதாள் அலுவலகம் ஆகிய அலுவலகங்களும், இரண்டாம் தளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, நேர்முக உதவியாளர்கள் அறைகள், நில பிரிவு அலுவலகம் ஆகிய அலுவலகங்களும், மூன்றாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் அறை, உதவி இயக்குநர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களும், ஏனைய தளங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களும் செயல்படும்.

மேலும் மூன்று பெரிய கூட்டரங்கங்கள், 3 சிறிய கூட்டரங்கங்கள், செயற்கை நீரூற்றுடன் கூடிய பூங்கா மற்றும் புல்வெளி, நடைபாதை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு, அலங்கார விளக்குடன் கூடிய தெரு விளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்பட்ட திட்டப் பணிகளின் விவரங்கள் 
வாணியம்பாடியில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்; வாணியம்பாடி வட்டத்தில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதிக் கட்டடம்; ஆம்பூர் வட்டம், சோலூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிக் கட்டடம்;

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், புங்கம்பட்டு நாடு பகுதிகளில் 2 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், சுந்தரம்பள்ளி, மேற்கத்தியானூர், குரும்பேரி, தோரணம்பதி, பல்லலபள்ளி, கசிநாயக்கன்பட்டி, தோக்கியம், சின்ன பேராம்பட்டு, பேராம்பட்டு, காக்கங்கரை, புலியூர், துத்திபட்டு, வடச்சேரி, வீராங்குப்பம், காரப்பட்டு, புங்கம்பட்டு நாடு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 16 துணை சுகாதார நிலையங்கள், புங்கம்பட்டு நாட்டில் செவிலியர் குடியிருப்பு மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பு, புதூர் நாட்டில் மருத்துவ அலுவலர் குடியிருப்பு, பச்சூரில் புறநோயாளிகளுக்கான கட்டடம்;

திருப்பத்தூர் வட்டம், ஆதியூர் இராவுத்தம்பட்டியில் சமுதாய நலக்கூடம்; நீர்வளத் துறை சார்பில் ஆம்பூர் வட்டம், வண்ணாந்துறையில் மாநில நிதியின் மூலம் கானாற்றின் குறுக்கே  கட்டப்பட்டுள்ள தடுப்பணை; என மொத்தம் 129 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 28 பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகளின் விவரங்கள்
வாணியம்பாடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையக் கட்டடம் கட்டும் பணி;

சுற்றுலாத் துறை சார்பில் ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மழையில் சாகச சுற்றுலாத்தளம் அமைக்கும் பணி;
திருப்பத்தூர் வட்டத்தில் கொடுமாம்பள்ளி, பூங்குளம் மற்றும் விஷமங்கலம் ஆகிய பகுதிகளில் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள், வாணியம்பாடி வட்டம், கொல்லகுப்பம், கானாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி; என மொத்தம் 13 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவிகள், முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதி, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், கடனுதவிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி வழங்குதல், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா மற்றும் தையல் இயந்திரம் வழங்குதல், பழங்குடியினர் சாதிச்சான்றுகள் வழங்குதல்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் உதவிகள், விசைத்தெளிப்பான் மற்றும் கைத்தெளிப்பான் வழங்குதல், விவசாய தொழில் முனைவோருக்கான உதவித்தொகை, தென்னங்கன்று வழங்குதல், பண்ணைக்குட்டை அமைத்தல், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் இயந்திரம் மற்றும் அரவை இயந்திரம் வழங்குதல், சூரிய சக்திமின் மோட்டார் அமைத்தல், சூரிய சக்தி மின் வேலி அமைத்தல், வங்கிக்கடனுதவிகள் போன்ற உதவிகள்; பால்வளத்துறை சார்பில் ஆவின் பாலகம் அமைத்தல், பால் கறவை இயந்திரம் வழங்குதல், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் விவசாயக் கடன், கல்விக் கடன், தொழில் கடன் உதவிகள் வழங்குதல், சமூக நலத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஸ்கூட்டர் வண்டிகள், காது கேட்கும் கருவிகள், தையல் இயந்திரங்கள், தொழில் மானிய கடனுதவிகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் செயற்கைக்கால் வழங்குதல்; கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்குதல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குதல், பழங்குடியினர் நலத்துறை சார்பில்வன உரிமைப் பட்டா, இலவச வீடு, இருளர் நலவாரிய அட்டைகள் வழங்குதல், தாட்கோ சார்பில் குழுக்களுக்கு கடன் உதவித்தொகை வழங்குதல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கண்ணொளி காப்போம் திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உதவிகள், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்குதல் என பல்வேறு துறைகளின் சார்பில் முதல்வர் ஸ்டாலின், 16,820 பயனாளிகளுக்கு 103 கோடியே 42 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT