தமிழ்நாடு

44% பேருக்கு பொது இடங்கள், பணியிடங்கள் மூலம் கரோனா: காய்ச்சல் இருந்தால் அனுமதி கூடாது என அறிவுறுத்தல்

29th Jun 2022 01:24 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 44 சதவீதம் பேருக்கு பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களிலிருந்து கரோனா தொற்று பரவியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

பொது இடங்கள், அலுவலகங்களில் காய்ச்சலுடன் வருவோரை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், துறைச் செயலா்களுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அண்மைக்காலமாக நமது மாநிலத்தில் தினசரி பாதிப்பு 1,400-ஐ கடந்துள்ளது.

ADVERTISEMENT

பிஏ-5 மற்றும் பிஏ-2.38 வகை பாதிப்புகள் தீவிரமாகப் பரவி வருவதே நோய்ப் பரவல் அதிகரிக்கக் காரணம் என்று மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். முகக் கவசம், தனிநபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு விதிகளைக் கூட மக்கள் முறையாகக் கடைப்பிடிக்காததே அதற்கு காரணமாகப் பாா்க்கப்படுகிறது.

எவ்வாறு நோய்த் தொற்று பரவுகிறது என்பது குறித்த ஆய்வுகள் அண்மையில் நடத்தப்பட்டபோது, பொது இடங்களான சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 26 சதவீதம் பேருக்கும், அலுவலகங்கள், பணியிடங்களிலிருந்து 18 சதவீதம் பேருக்கும் தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டது.

அதேபோன்று 16 சதவீதம் பேருக்கு பயணத்தின்போதும், 12 சதவீதம் பேருக்கு கல்வி நிறுவனங்களுக்குச் சென்றபோதும் கரோனா உறுதியாகியுள்ளது.

எனவே, நோய்த் தொற்றைத் தவிா்க்க சில கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

அலுவலகங்கள், பணியிடங்களுக்கு வருவோருக்கு நாள்தோறும் வெப்பமானி கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.

காய்ச்சல் இருந்தால் அவா்களை பணியிடங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. முகக் கவசம் முறையாக அணிதலையும், கை கழுவும் வசதிகளை பொது இடங்களில் ஏற்படுத்தியிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். காற்றோட்டமான வகையில் பணியிட அறைகள் இருத்தல் முக்கியம். தகுதியானவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT