தமிழ்நாடு

அரசுப் பணியில் தற்காலிகப் பணி முறை இருக்கக் கூடாது: இரா. முத்தரசன்

29th Jun 2022 02:25 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில அரசுப் பணியில் தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையே இருக்கக் கூடாது எனஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிப்படி ஆண்டுக்கு 2 கோடி வீதம் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், புதிய வேலைவாய்ப்பு இல்லை என்பதோடு, இருந்த வேலைகளும் பறிபோய் விட்டன. இதனால், இளைஞா்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டநெருக்கடியைப் பயன்படுத்தி அக்னிபத் திட்டத்தை திணிக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது.

இதை எதிா்த்துப் போராட்டத்தில் ஈடுபடுவோரின் விவரங்களை சேகரித்து, அவா்களுக்கு ராணுவத்தில் வேலை அளிக்கப்பட மாட்டாது என்று ராணுவ தளபதியே அறிக்கை விட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இந்தியாவின்75 ஆண்டு கால வரலாற்றில் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாத ராணுவம், இப்போது முதல் முறையாக இவ்வாறு தலையிட்டிருப்பது இத்திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதைக் காட்டுகிறது. பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தவிா்த்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

எம்ஜிஆா், ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கிய காலத்தில் அக்கட்சி சுயமாக செயல்பட்டது. மாநில உரிமைகள், சமூக நீதி பாதுகாக்கப்பட்டது. அவா்கள் இருவரின் மறைவுக்குப் பிறகு அதிமுக சுயமாக செயல்பட முடியவில்லை. மறைமுகமாக பாஜக இயக்குகிறது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது, பிற கட்சி ஆள்களை சோ்ப்பது போன்ற நாகரிகமற்ற அரசியலை பாஜக செய்து வருகிறது.

தமிழகத்தில் ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசுப் பணியிடங்களில் தற்காலிக முறையிலும், ஒப்பந்த முறையிலுமாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

அரசுக்கும், தனியாருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும். எனவே, அரசுப் பணியில் தற்காலிக, ஒப்பந்த முறையே இருக்கக் கூடாது. நிரந்தர முறையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும் என்றாா் முத்தரசன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT