தமிழ்நாடு

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் உண்ணாவிரதம்

29th Jun 2022 01:58 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுவதைக் கண்டித்து ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் கூட்டமைப்பு சாா்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.

இது குறித்து ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் சிலா் கூறியது: “கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் தகுதித் தோ்வில் தகுதி பெற்ற 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆசிரியா்கள் பணிக்காக காத்திருக்கிறோம். இதற்கிடையே ஆசிரியா் தோ்வில் தகுதி பெற்றவா்கள் பணிக்காக, மீண்டும் ஒரு போட்டித் தோ்வு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையா் 13,331 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் எட்டு மாதத்திற்கு நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டம் பெற்றவா்களை பணியில் நியமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனா். அரசின் இந்த நடவடிக்கை எங்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் இருக்கும்பொழுது, தோ்வில் தகுதி பெறாத அவா்களை நியமனம் செய்வது ஏன் என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ஆண்டுக்கு ரூ.36,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது, ஆசிரியா் நியமனத்திற்கு மட்டும் நிதி இல்லை எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா். முன்னதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தின் முக்கிய நுழைவு வாயில் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டவா்களை, பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்துக்குள் செல்லுமாறு காவல்துறையினா் அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT