தமிழ்நாடு

திருவேற்காட்டில் ரூ.2 கோடியில் குளம், சாலை சீரமைப்புப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் தொடக்கி வைத்தார்

29th Jun 2022 03:38 AM

ADVERTISEMENT

திருவேற்காடு நகராட்சியில் ரூ.2.17 கோடியில் குளம், சாலை சீரமைப்புப் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடக்கி வைத்தார்.
 திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ராஜாங்குப்பம், பாடசாலைத் தெரு ஆகியவை பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக கிடந்தது. இதனால், சாலையைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
 மேலும், அயனம்பாக்கம், பாட்டான்குளமும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், புனரமைப்புப் பணிகளும் நடைபெறாமல் இருந்தன.
 இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, அவர் சமீபத்தில் சாலை மற்றும் குளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 பின்னர், அவற்றைச் சீரமைக்க திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
 இதையடுத்து, ஆவடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ராஜாங்குப்பம், பாடசாலைத் தெரு சாலையைச் சீரமைக்க ரூ.50 லட்சமும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அயனம்பாக்கம், பாட்டான்குளத்தை தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தி நடைபாதைகளுடன் மின்விளக்கு அமைக்கும் பணிக்கு ரூ.1.67 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
 மேற்கண்ட இடங்களில் சாலை, குளம் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் பூமி பூஜை செய்து செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
 விழாவுக்கு திருவேற்காடு நகர்மன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் டி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT