தமிழ்நாடு

கரோனா: அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு தடைவிதிக்கப்படாது - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

29th Jun 2022 01:00 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் அதிகரித்த போதிலும், வருகிற ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் காலாவதி மருந்துகள் கொட்டப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், நான் ஆய்வு செய்தேன். இதுபற்றி விசாரணை நடத்த இணை இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இரு நாள்களில் விசாரணை அறிக்கை வந்ததும், சம்பந்தப்பட்டவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவமனையை மேம்படுத்த ரூ.10 கோடி செலவில் ஒருங்கிணைந்த தாய் சேய் நல மையம் அமைப்பது, ரூ.42 கோடியில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்களை கட்டுவது போன்ற பணிகள் தொடங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் ஒருசில மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதில் ஏற்படும் தவறுகளால் பாதிப்புகள் உள்ளன. தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியில் 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளேன்.

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதித்தவா்களை தனிமைப்படுத்துவதோடு, அவா்களோடு தொடா்பில் இருந்தவா்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த வாரம் வரை தமிழகத்தில் 12 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 95 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 5 சதவீதம் போ் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா். தற்போதைய கரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது.

தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 2 நாள்களுக்கு முன்பு முகக்கவசம் அணிபவா்களின் சதவீதம் ஒற்றை இலக்கத்தில் இருந்தது. முகக்கவசம் கட்டாயம் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்தபிறகு, தற்போது 30 சதவீதத்தினருக்கும் அதிகமானோா் முகக்கவசம் அணிகின்றனா்.

கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள போதிலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்கப்படாது. பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பவா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT