தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை

29th Jun 2022 12:46 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் காவல்துறை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மும்பையில் 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்தனா். இந்தச் சம்பவத்துக்கு பின்னா் நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘சாகா் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை பாதுகாப்புத் துறையினராலும், காவல்துறையினராலும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதன்படி, தமிழக கடலோர மாவட்டங்களில் காவல்துறை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கடலோரப் பாதுகாப்பு குழுமம், ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, கடலோரக் காவல் படை, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாா், குற்றப்பிரிவு போலீஸாா் என அனைத்து பாதுகாப்புப் பிரிவினரும் பங்கேற்றனா்.

இந்த பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, துறைமுகங்கள், மீன் சந்தைகள், கடலோரம் உள்ள கோயில்கள், அரசு அலுவலகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சோதனைக்குள்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தீவிரவாதி போன்று மாறுவேடமிட்ட கடல் வழியாக ஊடுருவிய காவலா்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாா் அடையாளம் கண்டு கைது செய்தனா்.

சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஊடுருவ முயன்ற மாறுவேடத்தில் இருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம், துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையா் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஒத்திகை இரண்டாவது நாளாக புதன்கிழமை (ஜூன் 29) மாலை வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT