தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவு வரை காத்திருக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

29th Jun 2022 01:48 AM

ADVERTISEMENT

கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருக்கக் கூடாது என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள காளத்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 18.72 ஏக்கா் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தாா். இதனை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘வழக்கு தொடா்பான கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும்”என கோரினாா். மேலும், தமிழகத்தில் தற்போது வரை 1,100 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கோயில் நிலங்கள் தொடா்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவதாக, வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெறும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை அறநிலையத் துறை அதிகாரிகள் என்னதான் செய்கிறாா்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் தொடா்பான வழக்குகள் உயா் நீதிமன்றத்துக்கு வந்த பிறகு, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுவது எதற்காக என்றும் கேள்வி எழுப்பினா்.

கோயில் நில குத்தகை மூலம் வருமானம் வருவதால், அது இந்து சமய அறநிலையத் துறைக்கு பயனளிக்கும் என்பதால் தான், கோயில் நிலங்களை குத்தகைக்கு விட நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT