தமிழ்நாடு

நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு: அந்தரத்தில் தொங்கும் சிமெண்ட் சாலை

28th Jun 2022 03:23 PM

ADVERTISEMENT

 

நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிமெண்ட் சாலை அந்தரத்தில் தொங்குவதால், இதுகுறித்து அரசிடம் பல முறை வலியுறுத்தியும் தூண்டில் வளைவுகள் அமைக்காததால் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 200 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மீனவர்கள் தினமும் 50 படகில் சென்று தினமும் மீன்பிடித்து வருவது வழக்கம். இப்பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டி தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல் படிப்படியாக முன்னோக்கி வந்து விட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில் நெம்மேலி குப்பத்தில் உச்சக்கட்டமாக கடல் அலைகள் 30 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து மணற்பரப்புகளை அரித்ததால் கரைப்பகுதியில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள சிமெண்ட் சாலைகளின் காங்கிரிட்கள் இடிந்து விழுந்துவிட்டன. சிமெண்ட் சாலையில் ஒரு பகுதி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சிமெண்ட் சாலையில் ஒரு பகுதி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மீனவர்;கள் பரிதவித்து வருகின்றனர். 

அதனால் அங்கு வைக்கப்பட்டு இருந்த படகு, மீன்பிடி வலைகளை மாற்று இடத்தில் கொண்டு போய் வைத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது கடல் மேலும் 20 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து, சிமெண்ட் சாலையை சேதம் ஏற்படுத்தி விட்டதால் தங்கள் மீன்பிடி உபகரணங்களை வைக்க இடம் இல்லாமல் நெம்மெலி குப்பம் மீனவர்கள் பலர் தவித்து வருகின்றனர். 

இதையடுத்து நெம்மேலி குப்பம் மீனவர்கள் அந்தரத்தில் தொங்கும் சிமெண்ட் சாலையின் ஒரு பகுதி  கான்கிரிட் இடிந்து விழுந்ததால் கடலுக்குச் சென்று விட்டு படகில் கரை திரும்பும்போது தாங்கள் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், பல வருடங்களாகத் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும், மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு உடனே இப்பகுதியில் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதி மீனவர்கள் செவ்வாய்க்கிழமை அங்குள்ள கடற்கரையில்; யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்த புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் அங்குள்ள கோயில் மண்டபத்தில் கூட்டமாக அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைக் காண முடிந்தது. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் நெம்மேலி கடல் பகுதி படகு போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு துண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT