தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி குறித்து சொல்லப்படுவது முற்றிலும் தவறு: ஆய்வுக் குழு அறிக்கை

28th Jun 2022 09:43 AM

ADVERTISEMENT


சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் விளையாடுவோரின் திறன்கள் மேம்படுவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஆய்வுக் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல உயிா்களை பலி வாங்கி வரும், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. குழுவின் தலைவரும், குழுவினா் அறிக்கையை அளித்தனா்.ஓய்வு பெற்ற நீதிபதியுமான கே.சந்துரு தலைமையிலான ஆய்வுக் குழு அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...

ஆன்லைன் ரம்மிக்குத் தடை விதிப்பதற்கு அவசர சட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த  71 பக்க அறிக்கையில், பொதுமக்களின் உடல்நலம் இந்த விளையாட்டுக்ளால் பாதிக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் திறன்கள் மேம்படுவதாகக் கூறப்படுவது தவறு. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஆன்லைன் விளையாட்டுத் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் கைவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில், மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொணடு வர வேண்டும் என இந்தக் குழு பரிந்துரை செய்கிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நேற்று இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், 
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மக்கள், ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டு அதில் பெருமளவில் பணத்தை இழக்கின்றனா். எனவே, இந்த விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு, பாதிப்புகளை தரவுகளுடன் ஆராயவும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கவும் குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் கடந்த 10-ஆம் தேதி அமைக்கப்பட்ட குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநா் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனா் லட்சுமி விஜயகுமாா், காவல் துறை கூடுதல் இயக்குநா் வினித் தேவ் வான்கடே ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். இந்தக் குழு முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்கினாா். குழுவின் சாா்பில் நீதிபதி சந்துரு அறிக்கையை அளித்தாா்.

நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து திங்கள்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மாலை 6.40 மணிக்குத் தொடங்கியது. கரோனா நோய்த் தொற்று காலத்தில் நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்திலேயே அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், முதல் முறையாக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் தரைத் தளத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டமானது இரவு 7.55 மணி வரை நடைபெற்றது. இதில், ஆன்-லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வருவது, பல புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT