தமிழ்நாடு

அனுமதிபெறாமல் கட்டிய ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீடு இடிப்பு; கதறிய உரிமையாளர்

28th Jun 2022 01:47 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரத்தில் மாநகராட்சியிடமும், தொல்லியல் துறையிடமும் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இடிக்கப்பட்டது. கட்டிய வீடு இடிக்கப்பட்டதால் உரிமையாளர் குடும்பத்தினர் கதறியழுதனர்.

நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் அருள்ஜோதி. காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

ADVERTISEMENT

இவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டி உள்ளார். இந்நிலையில் அருள்ஜோதியின் பக்கத்து வீட்டுக்காரரான குப்புசாமி என்பவர் அருள் ஜோதி தனக்கு சொந்தமான இடத்தில் 3 அடி இடத்தையும் சேர்த்து வீடு கட்டியுள்ளதாக புகார் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதையும் படிக்க.. ஒரே குடும்பத்தில் 9 பேர் மரணம்.. திடீர் திருப்பம்? தற்கொலைக் கடிதத்தால் சிக்கிய குற்றவாளி

இந்நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் அருகே 300 மீட்டர் தொலைவில் எந்த ஒரு கட்டடத்தை கட்டினாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் எனும் விதி உள்ள நிலையில், அருள்ஜோதி தொல்லியல் துறையிடமும், மாநகராட்சி நிர்வாகத்திடமும் உரிய அனுமதி பெறவில்லை என தெரிகிறது.

இது குறித்தும் குப்புசாமி தனது வழக்கில் குறிப்பிட்டுள்ள நிலையில் கடந்த 2010ஆம்  ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த வீட்டை இடிக்க தொல்லியல் துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்களும், தொல்லியல் துறை அலுவலர்களும், காவல்துறை பாதுகாப்புடன் வந்து அருள் ஜோதியின் வீட்டை இடிக்க துவங்கி உள்ளனர். கட்டிய வீடு கண்ணெதிரிலேயே இடிக்கப்படுவதைக் கண்டு அருள்ஜோதி குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT