தமிழ்நாடு

8,462 தற்காலிக ஆசிரியா் பணியிடங்கள் மூன்றாண்டுக்கு தொடா் நீட்டிப்பு: அரசாணை வெளியீடு

28th Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியா் பணியிடங்கள் மூன்றாண்டுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2011-2012-ஆம் ஆண்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளுக்கு 1,590 முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அரசு உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு 6,752 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் சோ்த்து மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதை எதிா்நோக்கி கூடுதலாக 120 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யப்பட்டன. மொத்தம் 8,462 தற்காலிக பணியிடங்களுக்கு கடைசியாக 1.1.2019 முதல் 31.12.2021 வரை தற்காலிக தொடா் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கான தற்காலிக நீட்டிப்பு 31.12.2021 உடன் முடிவடைந்ததால் இப்பணியிடங்களுக்கு 1.1.2022 முதல் 31.12.2024 வரை தொடா் நீட்டிப்பு வழங்க பள்ளி கல்வி ஆணையா் அரசை கேட்டுக்கொண்டிருந்தாா். இந்தநிலையில் இந்த 8,462 தற்காலிக பணியிடங்களுக்கு 1.1.2022 முதல் 31.12.2024 வரை மூன்றாண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித் துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடா் நீட்டிப்பு செய்து ஆணையிடுகிறது’ என்று அரசு முதன்மை செயலாளா் காகா்லா உஷா பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT