தமிழ்நாடு

ரூ.171 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

28th Jun 2022 12:20 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ரூ.171 கோடியில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய தொழிற்பேட்டைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூா் கிராமத்தில் ரூ.115.07 கோடி மதிப்பில் 192 தொழில் மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 4 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளப்பாடி கிராமத்தில் ரூ.11.82 கோடியில் 171 தொழில் மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், 1,800 பேருக்கு நேரடியாகவும், 4 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சேலம் மாவட்டம் பெரிய சீரகப்பாடி கிராமத்தில் ரூ.22.22 கோடியில் 79 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 2 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நாமக்கல் மாவட்டம் ராசம்பாளையம் கிராமத்தில் ரூ.9.72 கோடியில் 107 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டையின் மூலமாக ஆயிரத்து 200 பேருக்கு நேரடியாகவும், 2 ஆயிரத்து 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில் ரூ.12.41 கோடி மதிப்பில் 105 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்மூலம், ஆயிரத்து 200 பேருக்கு நேரடியாகவும், 2 ஆயிரத்து 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். செங்கல்பட்டு மாவட்டம் தண்டரை கிராமத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைந்துள்ளது. இதில், வங்கி, உணவகம் உள்ளிட்ட ரூ.2.22 கோடியில் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளா் வி.அருண்ராய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT