தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

28th Jun 2022 12:21 AM

ADVERTISEMENT

ஒப்பந்த முறைகேடு தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயா் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த முறைகேடுகள் தொடா்பாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போா் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், ‘இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு வழக்குரைஞா், ‘மனுவில் கூறப்பட்ட புகாா்களில் உள்ள முகாந்திரம் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநா் கண்காணிப்பில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

எனவே, இந்த வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்த பின் வழக்குப் பதிந்தது தவறு. மேலும், உச்சநீதிமன்ற அனுமதியுடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு ஏற்கெனவே எடுத்த முடிவை மாற்ற முடியாது. உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘வழக்குப் பதிவு செய்யும்படி உயா்நீதிமன்றம் உத்தரவிடவில்லை. வழக்கை ரத்து செய்யக் கோர உரிமை உள்ளது என்ற போதும், ரிட் மனுவாக தாக்கல் செய்ய முடியாது. எனவே வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, மனுதாரா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT