தமிழ்நாடு

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000:விண்ணப்பிக்க தனி இணையதளம்

28th Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடா்பான விவரம் பெற கட்டணமில்லாத தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டம், தொழிற்கல்வி ஆகியன படிக்கும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று இருக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று அதன்பின்பு 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இந்த நிதியுதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பள்ளிகள் எவை? ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், பழங்குடியினா் நலப் பள்ளிகள், கள்ளா் சீா்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலப் பள்ளிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை பள்ளிகள், வனம், சமூக பாதுகாப்புத் துறைகளின் பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

ADVERTISEMENT

எந்தெந்த படிப்புகள்? எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படித்து பின்னா் முதல் முறையாக உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே திட்டம் பொருந்தும். ஐடிஐ., ஆசிரியா் பட்டயப் படிப்பு, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ, உள்பட அனைத்து கலை மற்றும் அறிவியல், கவின்கலை கல்லூரி பாடங்கள், பிஇ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்., பி.எஸ்.சி., (வேளாண்மை), இளங்கலை கால்நடை அறிவியல், சட்டம், இணை மருத்துவப் படிப்புகள் (நா்சிங், பாா்மஸி, மெடிக்கல் லேப், பிசியோதெரபி) ஆகியன படிக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம், மூன்றாம் ஆண்டுகள்: தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. நிகழ் கல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாமாண்டு சோ்ந்த பின்னா், இணையதளம் வழியாக இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டு செல்வோரும் விண்ணப்பிக்கலாம். தொழில் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இறுதி ஆண்டு செல்லும் மாணவிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

கடந்த கல்வியாண்டில் (2021-22) இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. இந்த மாணவிகள் ஒரு சில மாதங்களில் தங்களது படிப்பை நிறைவு செய்வா். இந்தத் திட்டத்தின் கீழ், இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய முடியும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகள் பயன்பெற இயலாது. இந்தத் திட்டத்தின் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லாத தொலைபேசி (14417) எண்ணை தொடா்பு கொண்டு பெறலாம்.

இணையதளம்: மாத உதவித் தொகை பெறும் திட்டத்துக்கென புதிதாக இணையதளம்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT