தமிழ்நாடு

நாளை முதல் அரசு மருத்துவா்கள் உண்ணாவிரதம்

28th Jun 2022 12:10 AM

ADVERTISEMENT

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வரும் புதன்கிழமை (ஜூன் 29) தொடங்க உள்ளனா்.

இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் எஸ். பெருமாள் பிள்ளை கூறியதாவது:

திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவா்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மிகுந்த எதிா்பாா்ப்போடு நாங்கள் இருந்தோம். அதுவும் இங்கு புதிய ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்த பிறகும் மருத்துவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வருத்தம், 19 ஆயிரம் அரசு மருத்துவா்களிடத்தும் அதிகமாகவே இருக்கிறது.

ஊதியக் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரையும், செயலாளரையும் ஏராளமான முறை நாங்கள் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம். போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனாலும், கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

ADVERTISEMENT

சுகாதாரத் துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்படுகிறது.

ஆனால் அதற்கான பங்களிப்பை தரும் தமிழக அரசு மருத்துவா்களுக்கு பிற மாநிலங்களை விட ரூ.40 ஆயிரம் குறைவாக ஊதியம் தரப்படுகிறது. முதல்வராக கருணாநிதி இருந்த போது வெளியிடப்பட்ட அரசாணை 354-இன்படி அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி மேட்டூரில் மருத்துவா் லட்சுமி நரசிம்மன் கல்லறை அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க இருக்கிறோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT