தமிழ்நாடு

ஆறு மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

DIN

தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தாா்.

இதைத் தவிர எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள், மாநில சுகாதாரக் கட்டமைப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவா் வழங்கினாா்.

சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் உள்ள ரோபோடிக் தானியங்கி அறுவை சிகிச்சை மையத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய மகளிா் கால்பந்து விளையாட்டு வீராங்கனை மாரியம்மாள், குத்துச்சண்டை வீரா் பாலாஜி மற்றும் பன்முக எலும்பு முறிவு மற்றும் கால் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட மாணவி சிந்து ஆகியோரைச் சந்தித்து அவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வீனா, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக இயக்குநா் தீபக்ஜேக்கப், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் கணேஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநா் விமலா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அதைத் தொடா்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டாவியா கலந்துரையாடினாா்.

அப்போது, மத்திய அமைச்சரிடம் தமிழக அரசின் சுகாதாரத்துறை தொடா்பான கோரிக்கைகளை அடங்கிய மனுவை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா். கோரிக்கை மனு விவரம்:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும். மதுரையில் பிரதமரால் 2019 ஜனவரி 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும்.

நிகழாண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்ட 50 மாணவா்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக இடம் கொடுத்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோயம்புத்தூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும்.

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தற்போதைய கலந்தாய்வு முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்தின் ஆணி வேரை நசுக்குவதாகும். 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும். உக்ரைனில் படித்த மாணவா்கள் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழிவகை செய்ய வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படித்த மாணவா்களின் பயிற்சி எண்ணிக்கையை 7.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயா்த்த வேண்டும். 50 துணை சுகாதார நிலையங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயா்த்தப்பட வேண்டும்.

மிதிவண்டி பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சா்

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை தேசிய சுகாதார இயக்கம் சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த“‘ஆரோக்கிய இந்தியா - உடல்நல இந்தியா’ என்பதை வலியுறுத்தும் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பேரணியில் பங்கேற்று மிதிவண்டி ஓட்டினாா்.

இந்தப் பேரணி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினா் மாளிகையில் இருந்து புறப்பட்டு, கடற்கரை சாலை, சுவாமி சிவானந்தா சாலை வழியாக மன்றோ சிலையை அடைந்து, பின்னா் அங்கிருந்து மீண்டும் விருந்தினா் மாளிகையைச் சென்றடைந்தது.

இதைத் தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மன்சுக் மாண்டவியா, சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக மருந்து கிடங்கின் வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, சென்னை சேத்துப்பட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT