தமிழ்நாடு

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்: வைகோ

DIN

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகளிலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமித்து வைக்க, அணுஉலைக்கு அப்பால் சேமிப்புக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் கோட்போலே செய்தியாளர்களிடம் கூறியதாக நாளேடுகளில் தகவல் வெளியாகி இருக்கிறது.  

கூடங்குளம்அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகம் அமைவதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக 2019 ஜூலை 10 ஆம் நாள், நெல்லை மாவட்டம், இராதாபுரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதை எதிர்த்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் இரத்து செய்யப்பட்டது. பிரதமர் அலுவலக மற்றும் அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கூடங்குளத்தில் வெளியாகும் அணுக்கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அந்த வளாகத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமித்து வைத்து, பின்னர் மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துச் செல்லும்வரை அணுஉலைக்கு அப்பால் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தெரிவித்தார். 

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது அபாயகரமான விளைவுகளை உருவாக்கும் என்று சூழலியல் செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 18, 2022 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கூடங்குளத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு அமைப்பதை கைவிட வேண்டும் என்றும், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் தற்போது கூடங்குளம் அணுஉலை வளாகத்தினுள் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையம் அமைக்க இந்திய அணுசக்திக் கழகம் திட்டமிட்டு வருவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் கூறி உள்ளார். கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3ஆவது மற்றும் 4ஆவது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT