தமிழ்நாடு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேச்சு

26th Jun 2022 06:37 PM

ADVERTISEMENT


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டால் எதிர்த்து போராட வேண்டும். அதுதான் சமூகம் குறித்தான அக்கறை என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார். 

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் கல்லூரி நாள் விழா, கல்லூரி வரலாற்றை தொகுக்கும் பெருந்திட்ட தொடக்க விழா, புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.

பின்னர், நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், கல்வி என்றாலே ஒரு சிலருக்கு மட்டும் தான் என இருந்த காலத்தில் சிறுபான்மையினருக்கு என்று 1951 இல் கல்லூரியைத் தொடங்கி உள்ளார்கள் என்றால் அது மிகப்பெரிய விஷயம்.

ADVERTISEMENT

இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கு காரணம் திராவிட இயக்கம் அதன் வகையில் தான் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. 

நான் 1964 இல் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது என் வகுப்பில் ஒரே ஒரு பெண் தான் படித்தார். ஆனால், இன்று ஆண்களை விட பெண்களே அதிகம் கல்வி பயின்று வருகிறார்கள். அதற்கு காரணம் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி தான். தற்போது அவர்கள் வழியில் உயர்கல்வியை மேம்படுத்த நம் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார்.

இதையும் படிக்க | திருச்சி ஜமால் முகமது கல்லூரி முப்பெரும் விழா: முதல்வர் பங்கேற்பு

இஸ்லாமியர்கள் கல்வி பயில 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. ஏராளமான மாணவிகள் ஹிஜாபோடு அமர்ந்து இருக்கின்றீர்கள். கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்றார்கள். ஆனால், அவர்களின் திட்டத்தை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் செய்தவர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் தான்.

மனிதாபிமானத்தை கூறுவது திராவிட இயக்கம். மனைவிகளின் தங்க நகைகளை அடமானம் வைத்துவிட்டு கல்லூரி கட்டணம் செலுத்திய காலம் இருந்தது. இன்று திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வர், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கல்லூரிகளில் இலவச கல்விக் கட்டணம் மட்டுமல்லாமல், விடுதி கட்டணமும் அறிவித்தவர் உலகத்திலேயே நம்முடைய முதல்வர் தான்.

எல்லோருக்கும் கல்வி பெற வேண்டும் என்கிற பெரியாரின் கனவை நினைவாக்கி வருபவர் முதல்வர் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் மறந்து விட கூடாது. படிக்கும் போதே தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் கனவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் 3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவோம் என்கிறார்கள். அப்படி இருந்திருந்தால் நாங்கள் படித்திருக்கவே முடியாது.

3,5,8 இல் பொதுத்தேர்வு வைத்தால் இடைநிற்றல் அதிகமாகி விடும். கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தது கருணாநிதி தான். அதை ரத்து செய்ததால் தான் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்கள். 

இதையும் படிக்க | கோவையில் எய்ம்ஸ், மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி: மா.சுப்பிரமணியன் கோரிக்கை

மாணவர்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மாநில அரசு வகுக்கும் கல்விக் கொள்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றவர், மாணவர்கள் விழிப்புணர்வோடு இருப்பதுடன் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டால் எதிர்த்து போராட வேண்டும். அதுதான் சமூகம் குறித்தான அக்கறை என பொன்முடி கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT