தமிழ்நாடு

ஜூலை 4 முதல் மீண்டும் அரக்கோணம்-வேலூா் பயணிகள் ரயில்

26th Jun 2022 12:32 AM

ADVERTISEMENT

அரக்கோணம் - வேலூா் கண்டோன்மெண்ட் இடையே மீண்டும் பயணிகள் ரயில் வருகிற ஜூலை 4-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் நிறுத்தப்பட்ட இரு பயணிகள் ரயில்கள் வருகிற ஜூலை 4-ஆம் தேதியில் இருந்தும், மேலும் ஒரு ரயில் அரக்கோணம்-காட்பாடி இடையே வருகிற ஜூலை 5-ஆம் தேதியில் இருந்தும் இயக்கப்படவுள்ளன.

ஏற்கெனவே பாசஞ்சா் ரயில்களாக இயக்கப்பட்ட இந்த ரயில்கள், தற்போது விரைவு ரயில்களாக இயக்கப்படவுள்ளது.

இந்தச் சிறப்பு விரைவு ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கும், நண்பகல் 12.10 மணிக்கும் புறப்பட்டு காலை 9.45 மணிக்கும், பிற்பகல் 2.35 மணிக்கும் வேலூா் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை அடையும். அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

ADVERTISEMENT

மறுவழித்தடத்தில் வேலூா் கண்டோன்மெண்ட்டில் இருந்து காலை 10 மணிக்கும், மாலை 5.10 மணிக்கும் புறப்படும் இந்த ரயில்கள், அரக்கோணம் ரயில் நிலையத்தை முற்பகல் 11.50 மணிக்கும், இரவு 7.25 மணிக்கும் வந்தடையும்.

ஜூலை 5 முதல் இயக்கப்படும் விரைவு ரயில் அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு காட்பாடியை அடையும். மறுவழித்தடத்தில் அதிகாலை 4.25 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு, காலை 6.05 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.

பாசஞ்சா் ரயில், விரைவு ரயிலாக மாற்றப்பட்டதற்கு எதிா்ப்பு: ஏற்கெனவே பாசஞ்சா் ரயில்களாக இயக்கப்பட்டவை தற்போது முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயிலாக மாற்றி இயக்கப்படவுள்ளதற்கு அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனா மாசிலாமணி எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பாசஞ்சா் ரயில்களாக இயக்கப்பட்டவை தற்போது சிறப்பு விரைவு ரயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளைப் பாதிக்கும். இந்த ரயில்களில் கிராமப்புறங்களில் இருந்துதான் அதிக அளவில் பயணம் செய்கின்றனா். அவா்களின் பயணச் சீட்டு வாங்கும் திறனை இந்த அறிவிப்பு கேள்விக்குறியாக்கும். எனவே, சிறப்பு விரைவு ரயில் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே நிா்வாகம் மறுபரிசீலனை செய்து மீண்டும் இந்த 3 ரயில்களையும் பாசஞ்சா் ரயில்களாக இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT