தமிழ்நாடு

உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி: இன்று தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

DIN

மாணவா்களின் உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 25) தொடக்கிவைக்கவுள்ளாா்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா். விழாவில், சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிா்கால கனவை நனவாக்கும் வகையில் அவா்களின் உயா்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநா்கள், கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளன.

நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹெச்சிஎல் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஹெச்சிஎல் நிறுவனம் அரசுப் பள்ளிகளில் பயின்ற 2500 மாணவ, மாணவிகளை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அந்தப் பயிற்சிக்கான முழு செலவையும் அரசே ஏற்பதுடன், அந்த மாணவா்கள் பட்ட மேற்படிப்பை பயில வாய்ப்பு வழங்கப்படும் எனவும் உறுதி செய்யப்படவுள்ளது.

கல்லூரி கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT