தமிழ்நாடு

என்ன, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரா ? 

24th Jun 2022 12:50 PM

ADVERTISEMENT

சென்னை: நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறிய கருத்துகளுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம் அளித்துப் பேசுகையில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தோ்வு செய்வதற்காக ஜூலை 11-இல் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது என்று வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே நிறைவுபெற்ற நிலையில், பொதுக்குழுவுக்கு எதிராக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறிய கருத்துகள் குறித்து சி.வி. சண்முகம் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தாலே பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கட்சி விதி இருப்பதால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டும் அதிகாரம் இருக்கிறது என்று  சி.வி. சண்முகம் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...

மேலும் கூறியதாவது, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

இதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். அதிமுக கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான விதி என்ன சொல்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டப்பட வேண்டும்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அவசியம் எனக் கருதினால் பொதுக்குழுக் கூட்டப்படலாம். அதில், பொதுக்குழு உறுப்பினர்களில், குறைந்த அளவாக ஐந்தில் ஒரு பங்கு வருகை தர வேண்டும். 

மேலும், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில்  ஒரு பகுதி எண்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக் கொண்டால் பொதுக் குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாள்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டும் என்று விதி சொல்லியிருக்கிறதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரின் அனுமதிப் பெற்றுத்தான் கூட்டப்பட வேண்டும் என்று சொல்லவில்லை.

பொதுக் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இது கட்டாயம். ஆகவே முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் தற்போதைய பொருளாளஐருமான ஓ. பன்னீர்செல்வம் கூறிய கருத்து முழுக்க முழுக்க தவறு என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க.. பெங்களூருவிலிருந்து மோடி கிளம்புவதற்குள் சாலையிலிருந்து தார் போய்விட்டதா? அதிரும் அதிகாரிகள்!

நேற்று பொதுக்குழுக் கூட்டம் சர்ச்சையுடன் முடிந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை நாடியிருக்கிறார்.

இதற்கிடையே ஓ. பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்று சி.வி. சண்முகம் குறிப்பிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்கான விளக்கத்தையும் அவரே அளித்துள்ளார்.

அதாவது, அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே திருத்தப்பட்டுத்தான்  சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த சட்ட விதிகளுக்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என்பதால், அவையும் காலாவதியாகிவிட்டன.

எனவேதான் அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இல்லை. ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டேன் எனவும் சி.வி. சண்முகம் விளக்கம் கொடுத்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT