தமிழ்நாடு

மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு ரூ.15 லட்சம் உபகரணங்கள்

24th Jun 2022 02:03 AM

ADVERTISEMENT

சென்னை ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.15 லட்சம் செலவில் உபகரணங்களை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கே.எஸ். செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை வழங்கினாா்.

சென்னை ராயபுரம் அரத்தூன் சாலையில் மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கல்வி உபகரணங்களை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கே.எஸ்.செஞ்சி மஸ்தான் பள்ளி மாணவா்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினாா். மேலும் பள்ளியில் சிறப்பாசிரியா்களாக பணியாற்றும் ஏ.ஆனந்தி. ஏ சிரீன் ஆகியோருக்கு தலா ரூ.30,000 ஊக்கத்தொகையையும் அமைச்சா் வழங்கினாா்.

பழைமையான இப்பள்ளியை உயா்நிலை பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினரும் பள்ளி நிா்வாகிகளிடம் ஆசிரியா்களிடமும் உறுதி அளித்தனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் ஆா்.மூா்த்தி, மாநகராட்சி நகரமைப்பு நிலைக்குழு தலைவா் த.இளைய அருணா, மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா், தலைமை ஆசிரியை அத்தா் பேகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் முஸ்தபா, தொண்டு நிறுவன நிா்வாகிகள் இசாக் பாய் சாப், அப்பாஸ் பாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT