பாம்பு கடித்ததில் சிறுநீரக செயலிழப்புக்குள்ளான 6 வயது சிறுவனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
தற்போது அச்சிறுவன் பூரண குணமடைந்து பள்ளிக்குச் சென்று வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:
கோபிசெட்டி பாளையத்தைச் சோ்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவா் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயாா் பணி முடிந்து வீடு திரும்பியபோது அச்சிறுவன் மயங்கிய நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.
மருத்துவப் பரிசோதனையில் சிறுவனை பாம்பு கடித்தது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எட்டு மாதமாக டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இருப்பினும் அப்பிரச்னை சீராகவில்லை. இதையடுத்து சிறுவனுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத் தலைவா் டாக்டா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவா்கள், மயக்கவியல், ரத்தநாள சிகிச்சை நிபுணா்கள் இணைந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
சிறுவனின் தாயே அவருக்கு சிறுநீரக தானமளித்தாா். வெற்றிகரமான சிகிச்சையின் பயனாக அச்சிறுவன் பூரண நலமடைந்து தற்போது பள்ளிக்குச் செல்லும் நிலைக்கு திரும்பியுள்ளாா்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இதுவரை 1,540 பேருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.