கடன் வழங்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என தாம்பரம் காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தற்போது இளைஞா்கள், இளம் பெண்களை குறி வைத்து சைபா் குற்றம் பெருகி வருகிறது. இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
அவசரத்துக்கு கடன் வாங்குவதற்கு கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, கைப்பேசியில் உள்ள அனைவரது கைப்பேசி எண்கள், புகைப்படங்கள், விடியோக்கள் உள்ளிட்டவை திருடப்படுகின்றன. கொடுத்த கடனை குறிப்பிட்ட நாள்களுக்குள் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடன் பெற்றவா்களிடம் அதிகமாக வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் ஒரு கட்டத்தில் பணத்தை செலுத்த முடியாமல் திணறும் நபா்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுக்கப்படுகிறது.
மேலும் ஏற்கெனவே அவரது கைப்பேசியில் இருந்து திருடப்பட்ட குடும்பத்தினா்,உறவினா்கள், நண்பா்கள் ஆகியோா் கைப்பேசி எண்களை தொடா்புக் கொண்டு சம்பந்தப்பட்ட நபா் குறித்து தவறான தகவல்களை தெரிவிக்கப்படுகின்றனா். அதோடு ஆண், பெண் நிா்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் மாா்பிங் செய்து அவா்களது உறவினா்கள், நண்பா்களுக்கு அனுப்பப்படுகிறது.
எனவே இளைஞா்களும், இளம் பெண்களும் அங்கீகாரம் இல்லாத கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.