தமிழ்நாடு

முதல் சுற்றில் இ.பி.எஸ். வெற்றி?

தத்து

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் குழப்பத்துடன், ஆனால், ஒரு தெளிவை நோக்கியதாகவே முடிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

கூட்டத்திலேயே கட்சியின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று நிரந்தர அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.

கூட்டத்தின் தொடக்கத்திலேயே தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போன்றோர் தெரிவித்துக் கொண்டிருந்தனர். 

மேடையிலிருந்த தலைவர்கள் அனைவருடைய இலக்கும் ஒற்றைத் தலைமை பற்றியதாக இருந்தது, ஓ.பி.எஸ். மற்றும் வைத்திலிங்கம் போன்ற சிலரைத் தவிர.

இவ்விஷயத்தில் கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதைப் போல, நேற்றே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலர் இபிஎஸ்ஸைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஏறத்தாழ இந்தப் பொதுக்குழுக் கூட்டம், எடப்பாடி பழனிசாமி அணியினர் திட்டமிட்டபடியே நடத்தி முடிக்கப்பட்டதாகக் கூறலாம்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே தன்னுடைய காய்களை வெட்டுக்குக் கொடுத்ததைப் போல, ஒற்றைத் தலைமை பிரச்சினை கனன்றுகொண்டிருக்கும் நிலையில் - கட்சியே இரண்டுபட்டுக் கிடந்த நிலையில் - சசிகலாவுக்கு ஆதரவானவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்தை அதிமுகவில் பெரும்பாலானோர் சற்றும் ரசிக்கவில்லை என்றே கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

மீண்டும் ஒருமுறை எல்லாருமாக சசிகலா சொல்வதைக் கேட்க வேண்டி வருமோ என்ற அச்சம் கட்சியில் பரவலாகவே இருக்கிறது. 

ஜெயலலிதா இருந்த காலத்தில் தவிர்க்க இயலாத நிலைமையில் சசிகலாவின் அதிகாரத்தை அனைவரும் ஏற்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். இன்றைக்கு நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. ஜெயலலிதா காலம் போல சசிகலா சொல்வதையோ, டிடிவி தினகரன் சொல்வதையோ கேட்டுக்கொண்டிருப்பதில் யாருக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

ஜெயலலிதாவின் தவறுகளுடன் சசிகலாவை அடையாளப்படுத்திவிட்டு, அவரை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் நிலையில் கட்சித் தொண்டர்கள் இருக்க, தொடர்ந்து, தன்னுடைய நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டே வந்துள்ள ஓ. பன்னீர்செல்வமோ,  முழுப் பொறுப்புக்கு வந்தால் கட்சியை மீண்டும் சசிகலாவிடம் ஒப்படைத்துவிட மாட்டார் என்பது மட்டும் என்ன நிச்சயம்? என்ற கேள்வியே பரவலாக வலம் வருகிறது.

தவிர, முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் சந்தித்ததுடன் ஆட்சி சிறப்பாக நடப்பதாகப் பாராட்டியதும்கூட உவப்பாகப் பார்க்கப்படவில்லை. 

இவை எல்லாவற்றையும் தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுவிட்ட நிலையில், திட்டமிட்டோ திட்டமிடாமலோ பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தாமதமாக வந்தாலும் மேடைக்கு முன்னதாகவே வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தாமதமாகத்தான் வந்தார் ஓ. பன்னீர்செல்வம்.

மேடையில் தலைவர்கள் இருவருக்கும் நடுவே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார். ஆனால், இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

தற்போது எழுந்துள்ள புதிய சூழலில் சட்டப் பிரிவுகளைப் பிடித்துக்கொண்டுதான் இனி ஓ. பன்னீர்செல்வம் போராடுவார் என எதிர்பார்க்கலாம்; வேறு வழியுமில்லை. அதற்கான தொடக்கம் என்பதைப் போலவே, இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழுக் கூட்டம், என்று குறிப்பிட்டுவிட்டு ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் வெளியேறியுள்ளார். கூட்டத்திலிருந்து ஓபிஎஸ்ஸும் பாதியில் வெளியேறிவிட்டார். 

தவிர, இதற்கேற்பவே கட்சியின் விதிகள் தொடர்பான சிக்கல்கள் இருக்கின்றன. ஏற்கெனவே இருக்கும் விதிகள், கடந்த பொதுக்குழுவில் செய்யப்பட்ட திருத்தங்கள் எல்லாமும் சேர்ந்து - பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லுமா? அடுத்து அதிகாரப்பூர்வமாகப் பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லாமல் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்க முடியுமா? - என ஒட்டுமொத்த சிக்கலையும் - கூடவே அதிமுகவையும் சேர்த்து -  நீதிமன்றத்தின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தக் கூடும்.

மேலும், வழக்கமான விஷயங்கள் தவிர்த்து, எல்லாரும் அறிந்த உண்மையெனக் கருதப்படுகிற வகையில், இவர்கள் இருவருமே மேலெழுந்துவரக் காரணமான, இருவரையும் ஊட்டி வளர்த்து அதிகார மையங்களாக உருவாக்கிய,  மத்தியிலுள்ள ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் பிரதமர் மோடி, அமித் ஷா போன்றவர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதும் இவர்களின் - அதிமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கலாம்.

ஆனாலும், பொதுக்குழுவில் கட்சியின் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமி பக்கமே என்று, உண்மையோ தோற்றமோ, உருவாக்கப்பட்டுவிட்டது என்பது மட்டும் உறுதியாகத் தென்படுகிறது. முதல் சுற்றை முற்றிலும் தனக்கானதாக மாற்றிக் கொண்டுவிட்டார் இபிஎஸ். அடுத்தடுத்த சுற்றுகளில் என்னென்ன நடைபெறவிருக்கின்றனவோ?

சட்டப் பிரச்சினைகள், தடங்கல்களைத் தாண்டி, ஜூலை 11-ல் அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா? இந்த கால அவகாசத்தை யார் யார் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்? எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நகர்வுகள் என்னவாக இருக்கும்? அதிமுக தொண்டர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இனியும் சமாதானம் சாத்தியமா? காத்திருக்கத்தான் வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT