தமிழ்நாடு

ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

கோமதி எம். முத்துமாரி

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் மிகவும் பரபரப்புடனும் சலசலப்புடனும் இன்று முடிந்திருக்கிறது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.  பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவுடன் ஒற்றைத் தலைமை கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது. 

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்தது. நேற்று முதலே மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இன்று ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருமே எதிரெதிர் துருவங்களாகப் பொதுக்குழுவுக்கு வந்து சேர்ந்தார்கள். 

இருவரும் வேறுவேறு பாதையில் வந்தது, எடப்பாடி பழனிசாமி தாமதமாக வந்தது வேண்டுமென்றே என ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது, எந்தவித ஆரவாரமுமின்றி ஓபிஎஸ் வந்த அதேநேரத்தில் தொண்டர்கள் கோஷம் முழங்க இபிஎஸ் அரங்கத்திற்கு வந்தது, பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸை வரவேற்காமல் கட்சி நிர்வாகிகள் அவரை வெளியேறச் சொல்லி கோஷமிட்டது, இறுதியாக மேடையில் பேசிய அனைவரும் இபிஎஸ்ஸை புகழ்ந்துபேசி ஓபிஎஸ்-யை கண்டும்காணாமல் விட்டது, இறுதியாக கூட்டம் முடிவதற்கு முன்பே அவர் மேடையை விட்டு இறங்கியது என பல எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறின.

ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி வைத்திலிங்கம் மேடையில் இருந்த நிலையில் 'துரோகி' என இபிஎஸ் தரப்பாளர்கள் கூறி அவரை மேடையில் இருந்து இறக்கியதும் குறிப்பிடத்தக்கது. 

அதுபோல மேடையில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் இடையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இருந்தார். இருவரும் மிக அருகருகே இருந்தும் பேசிக்கொள்ளவே இல்லை.

இதுவரையில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்குள்ளும் மறைமுகமாக மோதல்கள் இருந்தாலும் கட்சி விஷயத்தில் இருவரும் 'பெயரளவுக்காவது' ஒற்றுமையுடன் செயல்பட்டு வந்த நிலையில், இன்று வெளிப்படையாக மோதல் நீடித்து வருகிறது. 

ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் இன்று, நேற்று என்றில்லை. ஜெயலலிதா மறைந்ததில் இருந்தே இருக்கிறது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். ஓபிஎஸ் துணை முதல்வரானார். 

அடுத்தாக, சசிகலாவுக்கு எதிராகத் திரும்பிய ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரின் ஆதரவுடன் கடந்த 2017ல் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதிலாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு கட்சியிலும் பழனிசாமிக்கு பதவி வழங்கப்பட்டது. 

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தேர்வான நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டது. 

அடுத்து பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு சட்டப்பேரவையில்,  எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி வந்தது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியில் பிளவு ஏற்படக்கூடாது என்பதற்காக, இந்த பதவியை ஓபிஎஸ் விட்டுக்கொடுத்தார் என்றே நம்பப்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான நிகழ்வுகளில் எடப்பாடி பழனிசாமிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேலும் பழனிசாமிக்கு கட்சியில் ஆதரவும் அதிகரித்து வந்தது. 

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி கட்சிக்குத் தலைமை ஏற்கும் அளவிற்கு வந்துள்ளார். 

கட்சி மீண்டும் பிளவுபட்டு விடக்கூடாது, தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவ்வப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரிடையே மோதல்களும் சமாதானங்களும் இருந்துவந்த நிலையில் அதிமுக கட்சியின் தலைவராக (ஒருங்கிணைப்பாளர்) இருந்தும் ஓபிஎஸ் இன்று ஓரங்கப்பட்டுள்ளார். 

ஜெயலலிதாவுக்கும் கட்சிக்கும் தீவிர விசுவாசியாக இருப்பவர் ஓபிஎஸ் என்ற கருத்து நிலவுகிறது. அதற்கேற்பவே, ஜெயலலிதா இருந்தபோது, ஒவ்வொரு முறையும் அவர் தற்காலிகமாக முதல்வர் பதவியில் இருந்து விலகும்போதும் ஓபிஎஸ்ஸைத்தான் தன்னுடைய இடத்தில் நியமித்து விட்டுச் சென்றிருக்கிறார். ஜெயலலிதா இருந்த காலத்தில் அவருக்கு அடுத்தபடியாக செயல்பட்டவர் ஓபிஎஸ். அப்படிப்பட்ட ஓபிஎஸ்தான் இன்று அதே கட்சி நிர்வாகிகளால் ஓரங்கட்டப்பட்டுள்ளார். 

'ஒற்றைத் தலைமை' என்ற விவகாரத்தை ஜெயக்குமார் வெளியில் கூறிய ஒருசில நாள்களிலேயே படுவேகமாக ஓபிஎஸ் தரப்பினர் பலரும் இபிஎஸ் பக்கம் சென்றனர். அதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது. 

தற்போது 'ஒற்றைத் தலைமை' என்ற முடிவில் பெரும்பாலான நிர்வாகிகள் உறுதியாக இருக்கும்  நிலையில் பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்துள்ள நிலையிலும் வெகு விரைவில் அவரே கட்சியை முழுவதுமாக நிர்வகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சட்டத்திற்குப் புறம்பான ஒரு பொதுக்குழு என்று ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றமும் தலையிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஓ.பன்னீர்செல்வமே தொடர்ந்து அதிமுக தலைமையில் அங்கம் வகிப்பாரா? அல்லது பழனிசாமி முழுவதுமாக அதிமுகவில் ஆதிக்கம் செலுத்துவாரா என்பது குறித்து அடுத்த பொதுக்குழுவில் தெரிய வரலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT