சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த பிலிப்பின்ஸ் நாட்டு பெண் பலியானர். இது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ்(48). இவர் சமூக வலைதளம் மூலம், பிலிப்பின்ஸ் நாடு மணிலா பகுதியைச் சேர்ந்த ரைசல் (35) என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 10 நாள்களுக்கு முன்பு, பிலிப்பைன்சில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த ரைசல், ஹாரிஷை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிக்க.. தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?
இதைத் தொடர்ந்து 10 நாள்களாக, பெங்களூரு பகுதியில் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று இருவரும் எர்ணாகுளம் செல்வதற்காக பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளனர். ரயில் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ரயில் நிலையத்தை கடந்தவுடன், ரைசல் ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஹாரிஷ் ஓமலூர் ரயில் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து இறங்கி மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ரைசல் சுமார் 50 அடிப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரது கணவர் ஹாரிஷிடம் விசாரித்து வருகின்றனர். ஹாரிஷ் வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தது அவரது குடும்பத்திற்கு தெரியாது என்பதும், இதனால் கணவரை கட்டாயப்படுத்தி எர்ணாகுளத்திற்கு மனைவி அழைத்துச் செல்வதும், அங்குச் சென்றால், தனது திருமண வாழ்க்கைப் பற்றி குடும்பத்தினரிடம் எவ்வாறு தெரிவிப்பது என்று குழப்பத்தில் இருந்த ஹாரிஷ் மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு பெண் ரயிலில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.